top of page
பரமன் பணியில்

சங்கை. நோவா சாஸ்திரியார்.
(Noah Sastriar)

Click to read

M1

தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார்
முத்ரையடி (முத்திரை அடி) 1
        
அறிமுகம் I

     சங்கை. வேதநாயகம் சாஸ்திரியார் அவர்கள் தம் படைப்புகளில் ;  அவை கீர்த்தனைகள் இலக்கியங்கள் பாடல்கள் எதுவானாலும் அதன் ஈற்று (கடைசி) கவிகளில் சில வரிகளில் தம் பெயரையோ பெயர் சார்ந்த எந்த ஒரு வார்த்தையையோ பதித்து கவிப்பொருள் மாறாது கருப் பொருள் சிதையாது பாடலின் ஞானம் குன்றாத வகையில், பாடலின் கருத்திற்கு இசைவாய் பாடி நிறைவு செய்வார், சாஸ்திரியார். இத்தகைய தன்மை அக்காலத்தே இருந்து வந்த மரபும் கூட . இப்படி வேதநாயகனின் பெயரைக் கொண்ட பாடல்களை, கீர்த்தனைகளை திருச்சபைகளில் பாடுவது கூடாது என்ற கட்டுப்பாடு போடப்பட்டது. இப்படிப்பட்ட விவாதங்கள், சர்ச்சைகள், தடைகள் ஏற்பட்ட பொழுது, சாஸ்திரியாரே அதற்கான விளக்கத்தை  பிற்காலத்தில் தாம் நீண்ட நெடிய காலமாக (1810 - 1855) எழுதி தொகுத்து உருவாக்கிய "ஜெபமாலை" எனும் நூலின் 'முகவுரை' யில் காரண காரியம் கூறி விளக்குகிறார்.
     இதற்கு என்ன விளக்கம் தந்தார் என்பதையும் , முத்திரையடி பதிந்த பாடல்களையும், அதன் பொருள் விளக்கங்களையும் வரும் நாட்களில் இப்பகுதியில் வெளியிடுகிறேன்.

 

பரமன் பணியில்
சங்கை. நோவா சாஸ்திரியார்.
தஞ்சாவூர்.

வே.சா., முத்திரையடி 2.
அறிமுகம் II

     வேதநாயகம் சாஸ்திரியார் தன் படைப்பில் முத்திரையடியை தான்  வைத்ததன் காரணத்தையும் விளக்கத்தையும் கீழ் உள்ளவாறு ஜெபமாலை - முகவுரையில்  குறிப்பிடுகிறார்.
     " பூர்வத்தில் தாவீது , ஆசாப்பு முதலானவர்கள் பாடின சங்கீதங்களில் தங்கள் பெயரை நாட்டினதுபோல் இங்கேயும் ஜெபமாலைக்கு ஜெபமாலை அதின் அந்தத்தில் (இறுதியில்) வேதநாயகன் தன் பெயரை நாட்டினான். அது பெருமையினால் அல்ல. கிருபாசனத்தின் நினைப்புக்கென்றும் இதைச் செய்தவன் இன்னான் என்று விரும்பினோர் அறிந்துகொள்ளவுந்தானே." 

யாத்திராகமம் 28 : 9 - 12 , 29.

9 . பின்னும் நீ இரண்டு கோமேதகக்கற்களை எடுத்து, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை அவைகளில் வெட்டுவாயாக. 
10 . அவர்கள் பிறந்த வரிசையின்படியே, அவர்களுடைய நாமங்களில் ஆறு நாமங்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு நாமங்கள் மறு கல்லிலும் இருக்கவேண்டும். 
11. இரத்தினங்களில் முத்திரை வெட்டுகிறவர்கள் செய்யும் வேலைக்கு ஒப்பாக அந்த இரண்டு கற்களிலும் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதிப்பாயாக. 
12 . ஆரோன் கர்த்தருக்கு முன்பாகத் தன் இரண்டு தோள்களின் மேலும் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை ஞாபகக்குறியாகச் சுமந்துவர, அந்த இரண்டு கற்களையும் ஏபோத்துத் தோள்களின்மேல் அவர்களை நினைக்கும்படியான கற்களாக வைக்கக்கடவாய். 
29. ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன். 
     இவ்வாறு சாஸ்திரியார் தான் பதித்த முத்திரையடிகளுக்கான காரணங்களைக் கூறி விளக்கியுள்ளார். 
 

பரமன் பணியில்
சங்கை. நோவா சாஸ்திரியார்.
தஞ்சாவூர்.

M2

வே.சா. , முத்திரையடி 3.
ஜெபமாலை - காப்பு - கவி 3.
 

"சீருற்றமணி பரம எருசலேம் மணி அர்ச்சய 
தேவ தேவத் திருமணி
திரித்துவ தத்துவ மகத்துவ ஏகத்துவ மணி 
சிகாமணி மனோமயமணி

பாருற்ற அருவமணி உருவமணி அருப  ரூபா மணி பராபரமணி
பரிசுத்த துத்திய உத்தம சத்திய வேதமணி 
பரம கிருபாசனமணி

ஏருற்ற வேத நாயகன் மந்திரமணி  சுந்தர 
ஏகாந்தமணி அம்மணி *
எந்தைமணி தந்தைமணி விந்தை ஆனந்தமணி 
இங்கண் என்றன் கண்மணி

நேருற்ற தேசுமணி மாசிலாமணி அரிய  நேசமணி யேசுநாத 
நீதிமணி அடியரின் பாவவினை தீர்த்தமணி 
நித்திய சிவத்தின் மணியே." 

சொற்பொருள் : 

* அம்மணி - அழகு மணி , அழகான மணி.

மணி - பொன் முதலியவற்றால் ஆனது , முத்து , அழகு. 
அர்ச்சயம் - வணங்குதல், துதித்தல்
சிகாமணி - சிரேஷ்டன், முதல்வன்
மனோமயம் - பஞ்ச கோசம் (( ஐந்து செல்வம் - 1. அன்னமயம் - தேக(உடல்) நிலை, 2. ஆனந்தமயம் - பரவச நிலை, 3. பிராணமயம் - உடலும் உயிரும் அற்ற நிலை, 4. மனோமயம் - எண்ணம், சிந்தை, 5. விஞ்ஞானமயம் - புத்தி, அறிவுநிலை.))
பாமணி - அழகு மணி
துத்தியம் - துதி, வணக்கம்
ஏகாந்தம் - தனித்துவம், ஒப்பற்ற
எந்தை - என் தந்தை
அம் - அழகு
கண்மணி - கண்ணின் கருவிழி
தேசு - அழகு, மகத்துவம்
சிவம் - மங்களம், உயர்வு, நித்திய யோகத்தில் ஒன்று.

முன் விளக்கம் : 

        இக்கவியில் 25 முறை ' மணி ' என்ற சொல்லை பயன்படுத்தி பராபரனை புகழ்ந்துரைக்கிறார் சாஸ்திரியார். தமிழ் மொழியில் ஒரு சொல்லுக்கு பல பொருள் கூறும் தன்மை உண்டு. அதனை பாவின் கருப்பொருள் உணர்ந்து கூறுதல் அவசியம். சாஸ்திரியாரின் பாக்களிலும் சிலவற்றில் நேரிடையாக பொருள் கூறி கடந்து போகும் பாடல்களும் உண்டு. பல பாடல்களுக்கு அப்படி நேரிடை பொருள் கூறும் தன்மை, அதாவது ஒரு பொருளைக் கூறி அதன் அர்த்தத்தை நிறைவு செய்தல் கூடாத ஒன்றாகும். ஆகவேதான் சாஸ்திரியாரின் பாக்களுக்கு உரை எழுத முயன்றவர்கள், அதற்கு எத்தனை அர்த்தங்கள் கூறி வகைப்படுத்தி மீள்வது என்ற ஐயத்தில் அதனை தொடாமல் அல்லது தொடராமல் விட்டுப்போனார்கள். சாஸ்திரியார் படைப்புகளில் திருமறை கருத்தும், தமிழ் மரபும் பிறழாமல், பற்பல கோணங்களில் பொருள் கூறுவது அவசியமாகிறது. 
         ஆதலால் அதனை ஒருவாறு ஒருசேர (மறை கருத்திலும், தமிழ் மரபிலும்) விளக்கம் கூற விழைகிறேன்.

பொருள் விளக்கம் : 
      (i) சீர் பொருந்திய பரம எருசலேமின் போற்றுதற்கும் வணங்குதற்கும் துதித்தலுக்கும் உரிய தேவாதி தேவ மதிப்புக்குரிய மணி. 
திரித்துவம் (மும்மைத் தன்மை : பிதா, குமாரன், பரிசுத்தாவி) , தத்துவம் (வேதப்பொருள்), மகத்துவம் (மகிமை), ஏகத்துவம் (ஒருத்துவம், ஒரே கடவுள்) என்ற நிலைகளைக் கொண்ட எல்லா செல்வத்துக்கும் கருவூலமாய் திகழும் முதல்வராகிய மணியானவர்.
     (ii) உலகில் உருவம் அற்றவராகவும்,  உருவம் கொண்டவராகவும், உருவமும் உருவம் அற்றவருமாகிய அழகு மிகுந்த பராபரனாகிய மணி. 
தூயவரும் வணங்குதற்குரியவரும் உத்தமரும் உண்மை வேதத்திற்கு உகந்தவரும் பரம கிருபாசனத்தில் வீற்றிருப்பவருமாகிய மணி. 
     (iii) உயர்வுகொண்ட வேதநாயகனின் மந்திர மணி, அழகிய ஒப்பற்ற அழகுமணி, 
என் தந்தையும் தந்தையின் தந்தையுமாய் விந்தை மிகு ஆனந்தம் கொண்ட மணியானவர் இங்கே எனது கண்மணி, எனக்கு விழியாக வழியாக ஒளியாக இருப்பவர்.
     (iv) நீதியும் மகத்துவமும் தூய்மையும் பொருந்திய அரியதோர் அன்பினை பொழியும் மணியான இயேசு நாதரே, நீதியுடன் அடியவர் பாவச்செயலை தீர்த்து ; நித்திய வாழ்வை , பாக்கியத்தை அருளும் மங்கள மணியே என பல மணிகளால் அலங்காரம் செய்து பராபரனை போற்றுகிறார் சாஸ்திரியார்.

பரமன் பணியில்
சங்கை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர்.
20.02.2020.

M3

வே.சா., முத்திரையடி 4. 
ஜெபமாலை - பதிகம். 

கிறிஸ்து வருகைப் பதிகம் , கவி 11.
விருத்தம் 

"ஆகநாயகன் திருச்சேய் ஆனார் வந்தார் 
ஆபிரகாமைப் பெயரிட்டு அழைத்தார் வந்தார்
நீதநாயகன் தரும நிலையார் வந்தார்
நித்திய ராசாங்க நன்னிதானர் வந்தார்
போத நாயகன் பொறுமையாளர் வந்தார்
புண்ணிய சொரூப பூபதியே வந்தார்
வேதநாயகன் பாட்டுக் கேட்டார் வந்தார்
மெய்யான கிறிஸ்தரசே வந்தார் தாமே".

சொற்பொருள் : 

ஆகநாயகன் - முழு நாயகன்
நீதநாயகன் - நன்னெறி, நீதிநாயகன்
தருமம் - நியாயப்பிரமாணம், அறம், நல்லொழுக்கம்
நன்னிதானர் - நல்ல பூலோக மகன்
போதநாயகன் - போதிக்கும் நாயகன்
புண்ணியம் - தூய்மை, நல்வினை, அறம்
பூபதி - அரசன்.

பொருள் விளக்கம் : 
       முழுமையான நாயகனாய் பிதாவின் திருமகனாக ஆனவர் வந்தார். ஆபிரகாமை, பெயர் கொடுத்து (ஆபிராம் - ஆபிரகாம். , ஆதியாகமம் 17 : 5.) அழைத்தவர் வந்தார். நன்னெறி கொண்ட நீதிநாயகர், அறச்செயலில் நிலை‌ப்பெற்றவர் வந்தார். நித்திய அரசிற்கு உரிய பூலோக மகன் வந்தார். போதிக்கும் நாயகனாக, பொறுமை உள்ளவராக வந்தார். தூய்மையே உருவாக கொண்ட அரசரே வந்தார். வேதநாயகன் பாட்டை கேட்டவர் வந்தார். மெய்யான கிறிஸ்து அரசரே, அவரே வந்தாரே. 

பரமன் பணியில் 
சங்கை. நோவா சாஸ்திரியார் 
தஞ்சாவூர்.
22.02.2020.

M4

வே.சா., முத்திரையடி 5. 
ஜெபமாலை 1., கவி 11.

கடவுள் வணக்கம். 
 

"திருநெல்வேலித் தேவசகாயன்
சேய் என என்னைச் செய்தாய் சரணம்
சிறியனை வேத நாயகன் என்றே
சித்தத்து அடிமை கொண்டாய் சரணம்
தருசெபமாலை முப்பத்தொன்றுந்
தயவாய் நித்தங் கேட்பாய் சரணம்
தாவீது அருளும் சங்கீதத்தைச்
சரியொத்து இதையும் கொள்வாய் சரணம்
குருமறையோரும் பெரியவராரும்
கோயில்கள் தோறும் சொல்லச் சரணம்
குவலயம் எல்லாம் நின்னைப் பாடிக்
கொண்டே வாழ்கப் பண்ணுஞ் சரணம்
எருசலை அதிபா ஒரு சருவேசா
என்று ஊழிக்கும் நின்றுஆள் சரணம்
எனை மீண்டவனே எனை ஆண்டவனே
யேசுநாதா சரணஞ் சரணம்." 

சொற்பொருள் : 

சேய் - மகன்
செய்தாய் - படைத்தாய்
சரணம் - அபயம் , பாதம் , வணக்கம் , பாதம் வணங்குகிறேன்.
சித்தம் - உள்ளத்து விருப்பம் 
குவலயம் - உலகம்
வாழ்க பண்ணும் - வாழச் செய்யும்
சரு(ர்)வேசா - கடவுள் 
(( சர்வேசன் = சர்வ(ம்) + ஈசன்) , (சர்வம் - எல்லாம் ,  ஈசன் - அரசன் ,  இறைவன் , கடவுள் , குரு , மூத்தோன்.  அதாவது எப்பொருட்கும் இறைவன்.))
ஊழி - நெடுங்காலம் , உலக முடிவு. 

பொருள் விளக்கம் : 
     திருநெல்வேலி தேவசகாயம் என்பவரின் மகனாகப் படைத்தாய், சிறுவயது தொடங்கி வேதநாயகன் என்று அடிமை கொள்ள விருப்பம் கொண்டாய், சரணம் (உம் பாதங்களை வணங்குகிறேன்.)
     இந்த ஜெபமாலையில் ஏறெடுக்கப்படும் முப்பத்தியோரு ஜெபங்களையும் நித்தம் கேட்டருள்க, தாவீது பாடிய சங்கீதத்தை கேட்டு அருள் ஈந்தது போல் என ஜெபமாலையையும் அதற்கு சமமாய் ஏற்று பதில் தருக.
      குருமாரும் திருமறை பயில்பவரும் பெரியோர் எல்லாரும் இந்த ஜெபமாலையைக் கோயில்கள் தோறும் சொல்லவும் உலகம் முழுவதும் உன்னைப் பாடிக்கொண்டே வாழவும் அருள் புரிவாயாக.
     எருசலேமின் தலைவனே, உலக முழுமைக்கும் ஒரே கடவுளே, உலக முடிவு மட்டும் எனை நடத்தும். என்னை மீட்டவனே என்னை ஆண்டுக்கொண்டவனே யேசுநாதனே சரணம் சரணம்.
 

பரமன் பணியில்
சங்கை. நோவா சாஸ்திரியார் 
தஞ்சாவூர்.
 27.02.2020.

M5

வே.சா., முத்திரையடி 6.
ஜெபமாலை 2., கவி. 11.

தேவ தோத்திரம்  

"காத்திரப் பராபரனைக் கும்பிடுகிறேன் - என்றன்
கண்மணியை விண்மணியைக் கும்பிடுகிறேன்
தோத்திரந் தோத்திரம் என்று கும்பிடுகிறேன் - சுத்த
சுவிசேஷ போதகனைக் கும்பிடுகிறேன்
நாற்றிசையும் நோக்கி நின்று கும்பிடுகிறேன் - வேத
நாயகனின் பாட்டனைக் கும்பிடுகிறேன்
சாத்திர விதத்துடனே கும்பிடுகிறேன் - தவிது
சங்கீர்த்தனங்கள் சொல்லிக் கும்பிடுகிறேன்.

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் எங்கள்
குருவேசு நாதர் பதங் கும்பிடுகிறேன்."

சொற்பொருள் : 

காத்திரம் - கனம், பெருமை
கும்பிடு - வணங்கு
போதகன் - போதிப்பவன்
நாற்றிசை - நான்கு திசைகள்
பாட்டன் - மூதாதை, பாட்டுக்கு உரியவன் (பாடப்படுபவன்)
சாத்திரம் - சாஸ்திரம் - ஒழுங்கு, கட்டளை, திருமறை
தவிது - தாவீது
சங்கீர்த்தனம் - புகழ்ச்சி.

பொருள் விளக்கம் : 

     கனம் பொருந்திய பராபரனை வணங்குகிறேன், என்னுடைய கண்ணின் மணியாகவும் விண்ணில் ஒளிரும் மணியாகவும் விளங்குபவரை வணங்குகிறேன்.
     தோத்திரம் தோத்திரம் என்று சொல்லி; தூய்மையுடைய, நற்செய்தி போதித்தவரை வணங்குகிறேன்.
     நான்கு திசையும் இருக்கும் பராபரனை, வேதநாயகனின் பாட்டுக்கு உரியவனை நோக்கி வணங்குகிறேன்.
(வேதநாயகனின் மூதாதையாகிய இயேசுவை - என்றும் பொருள் கொள்ளலாம்.)
     திருமறை கற்பித்த ஒழுக்க நெறியில் நின்று தாவீது அருளிய புகழ்ச்சி உரைகளைக் கூறி வணங்குகிறேன்.

     வணங்குகிறேன் நான் வணங்குகிறேன் எங்கள் குருவாகிய இயேசு நாதர் பாதங்களை வணங்குகிறேன்.

பரமன் பணியில்
சங்கை. நோவா சாஸ்திரியார் 
தஞ்சாவூர். 
03.03.2020.

M6

வே. சா., முத்திரையடி 7. 
ஜெபமாலை 3. கவி 10.

ஓம் பிரணவம் - இருக்கிறோம். 

வே.சா. கொடுத்துள்ள திருமறை ஆதாரங்கள் : 
(யாத்திராகமம் 3 : 14. அதற்குத் தேவன் : இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி , இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.

வெளிப்படுத்தின விசேஷம் 1 : 8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர் : நான் அல்பாவும் , ஓமெகாவும் , ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.) 

கவி 10.

"வேதநாயகன் சொல் வேதாந்தன் ஓம் நமா
மேசியாக் கிறிஸ்து விண் வேந்தன் ஓம் நமா
தாதை ஓம் தற் சுவாபத்து அச்சு ஓம் நமா
சருவ சீவாற்றும தயாலு ஓம் நமா
காதல் ஓம் கன்மலைக் கழுகுஅது ஓம் நமா
காரிய துரந்தர காரிய ஓம் நமா
நாதன் ஓம் இருக்கிறோம் ஓகோம் நமோ நமோ
நாயனா ஓசனா நமஸ்தன் ஆதியே."

     வே.சா. கொடுத்துள்ள திருமறை ஆதாரங்கள் : 
( கழுகு : யாத்திராகமம் : 19 : 4. நான் எகிப்தியருக்குச் செய்ததையும் , நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து , உங்களை என்னண்டையிலே சேர்த்துக் கொண்டதையும் , நீங்கள் கண்டிருக்கிறீர்கள். 
  உபாகமம் 32 : 11 , 12. கழுகு தன் கூட்டைக் கலைத்து , தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி , தன் செட்டைகளை விரித்து , அவைகளை எடுத்து , அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்து கொண்டு போகிறது போல ,
  கர்த்தர் ஒருவரே அவனை (யாக்கோபை) வழிநடத்தினார் ; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை. )

சொற்பொருள் : 

ஓம் - ஆமெனல் (ஆம் + எனல்)
ஓம் - அ + உ + ம்  -  3 மாத்திரைகள். 
ஓம் - மும்மைத் தன்மை இறை கோட்பாடு , முக்காலம் , முச்செயல் , மூவெழுத்து ஒன்றித்து எழும் ஓசை . 

பிரணவம் - அழியாதது . 
பிரணவம் - கழிந்ததும் நிகழ்வதும் வருவதுமாகிய முக்கூற்றுப் பிரபஞ்சம் எல்லாம் ஓமெனும் பொருளே. 
( ஆதாரம் : நா. கதிரைவேற்பிள்ளையின் "தமிழ் மொழி அகராதி" - சாரதா பதிப்பகம்., பக்கம் 354 , 1031.) 
( திருமறை சான்று - வெளிப்படுத்தல் Revelation 1: 8.) 

நமா , நமோ - நம - வணக்கம்
வேதாந்தன்(ம்) - வேதத்தின் முடிவு , கடவுள்
தாதை - தகப்பன் , பாட்டன் 
தற்சுவாபத்து அச்சு - தன் குணத்தினால் ஆன வார்ப்பு
தயாலு - தயாளன் - கிருபையுடையோன்
கழுகு -  யாத். 19 : 4 , உபா. 32 : 11 , 12. (வே.சா. குறிப்பு)
காரியம் - செய்கை, தொழில், பயன் 
துரந்தரம்(ன்) - வல்லவன் , பாரம் தாங்குவோன்
ஓகோம் - அதிசயத்தோன் - அதிசய சொல் 
நாயனா - அரசன், கடவுள்
ஓசனா - ஓசன்னா - இப்போது இரட்சியும். (திருமறை) 
நமஸ்தன் - வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவன்
ஆதி - கடவுள், தொன்மை, முதல், வேர். 

  சாஸ்திரியார் வாழ்ந்த காலத்தில், முழு வேதாகமம் என்பது அரிதாக கிடைக்கப் பெற்ற ஒன்று. அக்காலத்தில் சாஸ்திரியார் அதன் ஆதி முதல் அந்தம் மட்டும் உள்ள கருத்தியல்களை தொட்டும் தொடர்ந்தும் எடுத்து கையாண்டுள்ளது ,  அவரது இறையியல் ஞானம் மட்டும் அன்று ; அவர் திருமறையை கற்று அறிந்து உணர்ந்த திறனையும் வெளிக்காட்டுகிறது.
  இந்திய சமயம் - மொழி - மரபு - கலாச்சாரம் - நம்பிக்கை - தமிழின் தொன்மை ஆகியவற்றுடன் இயைந்து கிறிஸ்து நெறிக் கருத்துக்களையும் கூறுகளையும் நிலைநிறுத்தி இப்பகுதியை நிறுவியுள்ளதைக்  காணலாம். இதன் பொருளையும் இறை ஆழத்தையும் அதன் சிறப்பையும் விளக்குதல் என்பது எழுத்திலும் ஏட்டிலும் கூடாத ஒன்று. அது உன்னத உணர்வு சார்ந்த, உத்தம மகிழ்வுறு சுய அநுபவமாக இருத்தல் வேண்டும் என்பது என் விருப்பு. அதில் ஓர் சிறு முயற்சி இது. ......

பொருள் விளக்கம் : 

     வேதநாயகன் சொல்லும் கடவுளை (வேதத்தின் நாயகனாக இருப்பவரை) , வேதத்தின் முடிவாய் முழு பொருளாய் விளங்குபவரை ஆம் என ஏற்று வணங்குகிறேன். மேசியாவாகிய கிறிஸ்து, விண் அரசராக வீற்றிருப்பதை ஏற்று வணங்குகிறேன்.
     பிதாவுக்கு ஒத்த ஒரே சாயலாக விளங்கும் இயேசு கிறிஸ்துவை ( என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான். யோவான் 14: 9. ,
என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். யோவான் 12: 45.)   ஆம் என ஏற்று வணங்குகிறேன். உலகம் அனைத்திலும் உள்ள ஜீவ ஆத்துமாக்களுக்கு கிருபை உடையவராக இருப்பவரை ஆம் என ஏற்று வணங்குகிறேன்.
     கன்மலையில் கழுகுத் தன் குஞ்சுகளை செட்டைகளில் பாதுகாத்து தூக்கி சுமப்பது போல அன்பின் செட்டைகளில் அரவணைப்பவரை, செயலில் வல்லமையுடைய காரண கர்த்தரை ஏற்று வணங்குகிறேன். 
     இருக்கிறவராகவே இருக்கிற அதிசய கர்த்தா ; உமை ஏற்று வணங்குகிறேன் வணங்குகிறேன். மீட்பரே இப்போதே இரட்சியும் , வணங்குதற்குரிய பரம பிதாவே. 

பரமன் பணியில்
சங்கை. நோவா சாஸ்திரியார். 
தஞ்சாவூர். 
06.03.2020.

M7

வே. சா. , முத்திரையடி 8. 
ஜெபமாலை 4. கவி 10.

கிறிஸ்துவின் துதி

"சாதி யாவும் ஈடேற மனோகர தாதாவே நேயா
தாழ்வு இலாத மகா பரமேசுர சாகா ஓர்   ஏகா
மாது மா மரியாளிடம் ஏவிய மாதேவா சீவா
மாசிலா அவதார மகனாக வா கா நீ வா கா
வேதநாயகன் ஓதிய பாடலின் மேலா மேலாவே
மேசியா கருணா நதியே ததி மீள்வாய் ஆள்வாயே
ஆதியே திரியேக பரா சரண் ஆலே ஆலேலோ
ஆமனாம் மனுவேல் அரசே சரண் ஆலே ஆலேலோ." 

சொற்பொருள் : 

ஈடேற்றம் - இரட்சிப்பு, உய்வு, வாழ்வு
மனோகர - மன விருப்பமுடைய
தாதா - பாட்டன், பிதா 
நேயா - அன்புருவானவர்
சாகா ஓர் ஏகா - சாகாமையுள்ள ஓர் தனியனே (ஏகத்துவம் - ஒருத்துவம்)
மேவிய - உறவாய் வந்தவர், தங்கியவர்
அவதாரம் - இறங்குகை (இறங்கியவர்)
வா கா - வந்து காவல் செய்
ஓதிய - சொல்லிய
ததி - நிறைவு
சரண் - அடைக்கலம்
ஆமனாம் - ஆமன் (ஆமென்) + ஆம் , ஆம் என்றும் ஆமேன் என்றும் (2 கொரிந்தியர் 1 : 20)

பொருள் விளக்கம் : 

      எல்லா மக்களும் இரட்சிப்படைய விரும்பும் பிதாவே அன்புருவானவரே , உயர்மிகு பரமண்டலத்தில் தங்கியிருப்பவரே சாகாமை உள்ளவரும் ஒருவராய் தனித்துவத்தில் வீற்றிருப்பவரே , 
    பேறுபெற்ற பெண் மரியாளிடமிருந்து  பிறந்த உன்னத பரனே, உயிருள்ளவரே , குற்றமற்ற இறை மகனாக இறங்கியவரே (அவதரித்தவரே) வந்து என்னை காவல் செய் , நீ வந்து காவல் செய்.
    வேதநாயகன் சொல்லிய பாடலைக் காட்டிலும் மேலாக உயர்ந்து மிக உயர்ந்து இருப்பவரே , இரட்சகரே , கருணையை நதிபோல் பாய செய்பவரே , நிறைவான மீட்பை அருளி என்னை ஆளுகை செய்வாயே.
    பிதாவே , மூவரும் ஒருவராய் இருக்கும் பராபரனே , உம்மை அடைக்கலமாக அண்டினேன். ஆலே ஆலேலோ ! ஆம் என்றும் ஆமேன் என்றும் கூறி என் உடன் இருப்பவரே , ஆலே ஆலேலோ. ! 

பரமன் பணியில் 
சங்கை. நோவா சாஸ்திரியார் 
தஞ்சாவூர். 
10.03.2020.

M8

வே.சா. , முத்திரையடி 9.
ஜெபமாலை 5. கவி 10. 

தேவ மகத்துவம்

திருப்புகழ்

"தேவாதி தேவசங்க நாட்டனே நமோ நமோ
மூவரணி மீதுதங்கு பாட்டனே நமோ நமோ
சீயோனின் மாது கண்கள் தேட்டனே நமோ நமோ - திறலோனே

காவாதி சேயர் தங்கள் பாத்திரா நமோ நமோ
தாவீது இராச தந்தை கோத்திரா நமோ நமோ
கானானு தேசம் என்ற கேத்திரா நமோ நமோ - கலிலேயா 

மாவேத ஞான மந்திர சூத்திரா நமோ நமோ
பாவாணர் ஓது அனந்த சாத்திரா நமோ நமோ
வானோர்கள் பாடிவந்த காத்திரா நமோ நமோ - மறுரூபா 

ஏவாள் செய் பாதகங்கள் தாத்திரா நமோ நமோ
பாவேத நாயகன் சொல் தோத்திரா நமோ நமோ
ஏகாதி பாலர் எங்கள் நேத்திரா நமோ நமோ - இறையோனே." 

சொற்பொருள் : 

நமோ - நம - வணக்கம்
மூவரணி - திரித்துவத்தில் இருப்பவர்
பாட்டன் - பாட்டுக்கு உரியவன்
தேட்டன் - தேடப்பட்டவன்
திறலோன் - வல்லமையுள்ளவன்
காவாதி சேயர் - காவு + ஆதி + சேயர் -  தோட்டத்து ஆதிமக்கள்
கோத்திரம் - மரபு வழி , சந்ததி , வம்சம்.
கானானு - கானான்
கேத்திரம் - கெடிஸ்தலம் , பூமி ,  ஷேத்திரம் , ((வே.சா.  விளக்கம் : கேத்திரம் - கெடிஸ்தலம் - அதிகார விசாரனை கதித்த (மிகுந்த) இடம் , இராஜதானி - தலைப்பட்டினம், வேந்திருக்கை (அரசன் இருக்கும் இடம்))
சூத்திரம் - இரகசியம்
பாவாணர் - பாவலர் , கவிஞர் , புலவர்.
ஓது - சொல் , படிப்பு , போதி
சாத்திரம் - வேதாந்தம் , நூல் , மறைநூல்
காத்திரன் - வலியோன் , காவல் செய்வோன்
தாத்திரம் - கோடரி , கூர்வாள்.
ஏகாதி - தனியன் , தனித்துவம்
நேத்திரம் - கண்
எங்கண் நேத்திரா - எங்கள் கண்ணின் கண்ணானவன்
இறைவன் - எங்கும் நிறைந்திருப்பவன்

பொருள் விளக்கம் : 

     தேவாதி தேவனாகிய பரம்பொருளே ஐக்கியம் கோள்ளுதலில் விருப்பம் உடையவரே வணக்கம் வணக்கம். மூவராய் திரித்துவத்தில் (பிதா , குமாரன் , தூயாவி) நிலைத்திருப்பவரின் மீது பாடப்பட்ட பாடல்களுக்கு உகந்தவரே , சீயோன் குமாரத்தியின் கண்களால் தேடப்பட்டவரே ((மத்தேயு 21 : 4 , 5. "இதோ , உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய் , கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு , உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று , தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது (சகரியா 9 : 9)  நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது." ,  மேலும் வாசிக்க , ஏசாயா 62 : 11 ,  செப்பனியா 3 : 14 , சகரியா 2 : 10 , யோவான் 12 : 14. )) வல்லமையுள்ளவரே வணக்கம் வணக்கம்.
     தோட்டத்தில் இருந்த மக்களுக்கு (ஆதாம் , ஏவாள்) உகந்தவரே , தாவீது அரசனின் தந்தை ஈசாயின் சந்ததியில் தோன்றினவரே (ஏசாயா 11 : 1. "ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி , அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்."  - மேலும் வாசிக்க , ஏசாயா 11 : 10 , ரோமர் 15 : 12.) , கானான் எனும் தேசத்தில் இஸ்ரவேலருக்கு அதிகாரமிக்க விசாரனைக்காரராக இருந்து இராஜரீகம் (அரசாட்சி) செய்தவரே ,  கலிலேயா நாட்டவரே வணக்கம் வணக்கம்.
     உன்னத வேதத்தின் ஞான ஆலோசனையையும் அறச்செயல் வகைகளையும் அறிந்த காரண இரகசியனே , புலவர்கள் சொல்லும் ; அளவில் அடங்கா ஆற்றல் மிகு வேதத்தின் பொருளே , வான தூதர்கள் பாடிவந்த உலகின் காவலனே , மறுரூபம் கொண்டு பிரகாசித்து விளங்கியவரே வணக்கம் வணக்கம்.
     ஏவாள் செய்த பாவங்களை (ஏவாள் - மொத்த மனுகுலத்தின் அடையாளம்) வெட்டி வீழ்த்தும் கோடரியானவரே , பாடும் வேதநாயகன் சொல்லக்கூடிய தோத்திரத்துக்கு உரியவரே , தனித்துவம் கொண்ட பாலகனே எங்கள் கண்ணின் கண்ணானவரே எங்கும் பரந்து நிறைந்து இருப்பவராகிய இறைவனே வணக்கம் வணக்கம். 

பரமன் பணியில், 
சங்கை. நோவா சாஸ்திரியார் 
தஞ்சாவூர். 
13.03.2020.

M9

வே.சா. , முத்திரையடி 10.
ஜெபமாலை 6. கவி 13. 

தேவலட்சணம் 

ஆசிரிய விருத்தம்

"காலமே வா மிகத் தாமதஞ் செய்யாது
கடுசீக்கிரம் விரைவாக வா
கவனமாய்ச் செய்திகள் எலாத்தையுங் கேள் உனது 
காது சாய்த்து உறுதியாய்க் கேள்
வேலையில் என் அலுவலாய் நில்லு, பத்திரமாய் என் 
வீட்டை முழுதுங் காத்திரு
வெளியில் நான் போகையில் கூடவா, மீள்கின்ற 
வேளையும் எனைப் பின்தொடர்
சோலி வைக்காது எனக்கு ஆகவேண்டியது எலாஞ் 
சுறுசுறுப்புடன் உடனே செய்
தூங்காது இராப்பகற் கண்விழிப்பாய் நின்று 
சொன்னபடி யெல்லாம் நட
சாலவே வேதநாயகனை உன் கவி யென்று 
சகல பேர்க்குஞ் சொல்லிவை
தாதையாகிய வஸ்து வேதமாளிகை ரஸ்து 
சாமி யேசுக் கறிஸ்துவே ." 

முன் விளக்கம் : 

     கடவுளை பக்தி நெறியில் போற்றுதல், பரவுதல் என்பது மனித இயல்பு. இங்கே சாஸ்திரியார் இக்கவியில் கடவுளுக்கு கட்டளை இடும் முறையில் அதாவது வா , கேள் , நில் , இரு , செய் , நட  என பாடியிருப்பது பக்தியின் ஒரு நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. பக்தியை  நான்குபெரும்  வகைகளாக பகுத்து அறிவர்.  திருமறையில் வரும் நிகழ்வுகள் அடிப்படையிலும் நாம் அதை உணரலாம். நான்கு வகைகள் (முறைகள்) : 1. நன் மார்க்கம் -  சன்மார்க்கம் அதாவது எல்லாம் கடந்து நிற்கும் உயரிய நிலை , எல்லாம் வல்ல கடவுளாய் நோக்குவது (பண்பில் , குணத்தில் , செயலில்.) 
 2. சக மார்க்கம் - இது தனக்குச் சமமாக வைத்து பார்ப்பது. நட்பு , உறவு என்ற முறையில். (உ- ம்.) கிறிஸ்து - மணவாளன், திருச்சபை - மணவாட்டி. 
3. புத்திர மார்க்கம் - மகனாக மகளாக நினைத்து தன்னிலும் சிறியவராக , தன் உரிமைக்கு உட்பட்டவராக வைத்து பார்க்கும் நிலை. 
4. தாத மார்க்கம் - அடிமை நெறி - அதாவது தனக்குக் கீழ்ப்பட்டவராக  வைத்து அடிமையாக , வேலையாளாக பார்ப்பது. 
     கிறிஸ்தவ நம்பிக்கைக் கொண்டோர் ; இது திருமறைக்கு எதிரானது , விரோதமானது என்று நினைப்பீர்கள். ஏனென்றால் நாம் இறைப்பற்றில் வளர்ந்த உயர்ந்த நிலை அதுமட்டுமே. அதைக் கடந்தும் நாம் அனைவரும் முன்னேற வேண்டிய தருணங்கள் உண்டென்பதையும் திருமறை பாத்திரங்கள் , நிகழ்வுகள் வழி அறியலாம். ஆதாம் தொடங்கி ஆபிரகாம் , யாக்கோபு , மோசேயை குறித்துப் பார்க்கும்போது , ஒரு மனிதனோடு பேசுவது போல்  கடவுளோடு பேசினார்கள் என்பதை அறிவோம். யோனா , எலியா , தாவீது இவர்களின் செயல்கள் , கடவுளை தங்களுக்கு இணையானவராக , தோழராக , சகமனிதராக  அண்டினார்கள் என்பதை அறிவோம். மகிமை பொருந்திய கடவுள் என்பதில் மாற்று இல்லை , ஆனால் சில நேரங்களில் அவர்களின் இறைப்பற்று - நெருக்கம் - பக்தியின் உச்சம் இதுபோன்ற உறவுநிலையை ஏற்படுத்துகிறது. 
     தமிழ் இலக்கியங்களிலும் பல சான்றுகள் உண்டு. பக்தி என்பது சமயம் - மொழி - இனம் - நிறம் - நாடு கடந்தது.  பாரதியாரை அறிவோம்; அவருடைய படைப்பில் "கண்ணன் பாட்டு" என்ற பகுதியில் 'கண்ணன் என் சேவகன் ' எனும் பாடல் உண்டு. அந்த பாடலை ஒப்பு நோக்குவது எந்த சமய பக்திக்கும் பொதுவானது என்பதை காட்டும். 
     ஜெபமாலைக்கு உரை கண்டவரும் திறனாய்வு செய்தவருமாகிய ' தமிழ் மாமணி ' தஞ்சை மறைதிரு. சி. வி. சவரிமுத்து அடிகளார் ஜெபமாலை நூலுக்கு பெரும் விளக்கத்தையும் ஆழ்ந்த சிந்தனைகளையும் கருத்துகளையும் எழுதி  வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஜெபமாலையில் கடவுளுக்கு சாஸ்திரியார் கட்டளை இடுகிறாரே  என்று எண்ணினவர், திருமறை ஆதாரமாக, ஏசாயா 45 : 11 - ஆம் திருவார்த்தையை கூறி பதிவு செய்துள்ளது சிறப்புக்குரியது. 
    " தேவலட்சணம் " என்றதற்கு பொருள் கூறுவது நீண்டு செல்லும் என்பதாலும் இறைக் கோட்பாடுகள் அதன் வகைகள் புரிதலுக்கு கடினமுள்ளது என்றும் உணர்ந்து ; பாடலின் பொருள் விளக்கத்திற்குள் செல்கிறேன். 

சொற்பொருள் (வே.சா.) : 

சோலி - தொந்தரை - தொந்தரவு, வருத்தம் 
சுறுசுறுப்பு - விரைவு

சொற்பொருள் (பொது) : 

மீள்கின்ற - திரும்புகின்ற 
தாதை - தந்தை , பாட்டன் 
வஸ்து - பொருள் 
தாதையாகிய வஸ்து - தந்தையாகிய மெய்ப்பொருள்
மாளிகை - அரண்மனை , வீடு , பெரும்வீடு , கோயில். 
ரஸ்து - சரக்கு , சாமான் (Goods) ,  ( பொருட்களின் கூட்டுத் தொகுப்பு)

பொருள் விளக்கம் : 

     அதிகாலையில் வா, மிகவும் தாமதம் செய்யாது, மிக சீக்கிரமாக விரைவாக வா. சொல்லும் செய்திகளை (கட்டளைகளை , வேலைகளை) எல்லாம் கவனமாய் கேள் , உனது காதை சாய்த்து உறுதியாய் கேள். வேலையின் போது என் வேலையாய் (துணையாய்) நில் , என் வீடு முழுவதையும் பத்திரமாக காத்துக்கொள். வெளியில் நான் சென்றால் என்னுடன் கூடவா , போய் திரும்புகையிலும் என்னை பின்தொடர்ந்து வா.  எனக்கு தொந்தரவு நேராதபடி எனக்குச் செய்ய வேண்டியது எல்லாம் சுறுசுறுப்புடன் அதையும் உடனே செய்.  இரவு பகல் தூங்காது கண்விழித்திருந்து சொன்னபடியெல்லாம் செய்.   பெருமைமிகு வேதநாயகனை உன் கவிஞன் என்று உலகம் அனைத்திற்கும் சொல்லிவை.  தந்தையாகிய பரம்பொருளே , திருமறை மாளிகையில்  வைக்கப்பட்டுள்ள மெய்ப்பொருளாகிய சாமி , இயேசு கிறிஸ்துவே. 

பரமன் பணியில்  
சங்கை. நோவா சாஸ்திரியார் 
தஞ்சாவூர். 
01.04.2020.

M10

வே.சா. , முத்திரையடி 11.
ஜெபமாலை 7. கவி 11.

தேவ சுவாப மகிமை

உபையார்த்தம்

 

     தேவ  சுவாப (இயல்பு) மகிமை  என்ற தலைப்பில் அமைந்த இந்த  ஜெபமாலை உபையார்த்தம் என்ற இலக்கிய மரபில் அமைக்கப்பட்டுள்ளது. உபையார்த்தம் என்பது இரு பொருள் அல்லது இரண்டு அர்த்தங்கள் கொண்டது எனலாம் . ஒரு சொல் அல்லது ஒரு அடி , இருபொருள் கூறுவதாக  அமைந்திருக்கும் . இரண்டு இரண்டு அடிகளாய் ஒன்று போல் அமைந்திருக்கும் ; சொற்களில் அதன் பொருள் வேறுபட்டிருக்கும் . அதற்காக அதன் சொற்களை சரியாக பிரித்து பொருள் காண வேண்டும். இந்த இலக்கிய மரபிற்கு இலக்கண விதிகள் உண்டு. 

  மாதிரிக்காக ,   கவி. 7 -ல்,
' முன்னானவனே தானவனே
  முன்னானவனே தானவனே ' 

இது மூல கவி , இதனை சொல் பிரித்து கூறுவோமானால் ,

' முன் ஆனவனே தான் ஆனவனே
  முன்னான் அவனே தானவனே ' 

 என்று பிரித்து பொருள் கொள்ளுதல் வேண்டும். 

பொருள் : 
         ஆதியில் இருந்தவர், தானாய் இருந்தவர் அதாவது தனித்துவத்தில் ஒருவராய் இருந்தவர்.
நினையாத அற்புதர், தானங்கள் கொடைகள் அருள்பவர் .
என்று பொருள் கூறுகிறார் சாஸ்திரியார். 

     ஆகவே கவியின் பொருள் முழுமையாக விளங்கவேண்டும் என்று சாஸ்திரியாரே பதினொரு கவிகளுக்கும் பொருள் கூறியுள்ளார். அதனையொத்தே இக்கவிக்கு பொருள் கூற விழைகிறேன். 

        கவி 11.  சொல் பிரிக்காமல்.....

"வேதநாய கன்பாட்டா
மிகப்பாடுறுமோ ரன்பாட்டா
மெஞ்ஞானத்துக் காரணமே
மேலானத்துக் காரணமே
பாதுகாவே பரிசனையே
பரமகாவே பரிசனையே
பட்டாரகர்முன் படையாரே
பட்டார்நிகர்முன் படையாரே
நீதமுறையே கம்மறையே
நிறையமறையே கம்மறையே
நிதானப்பரமே திரித்துவமே
நேயப்பரமே திரித்துவமே
ஏததான சொன்னாரே
யேசுநாதர் சொன்னாரே
எந்தைபிதாவே வாவாவே
ஏயோவாவே காகாவே."

         சொல் பிரிக்கப்பட்டு......

"வேதநாயகன் பாட்டா
மிகப் பாடுறும் ஓர் அன்பு ஆட்டா
மெய் ஞானத்துக் காரணமே
மேலானத்துக்கு ஆரணமே
பாதுகாவே பரிசனையே
பரம காவே பரிச அனையே
பட்டாரகர் முன் படையாரே
பட்டார் நிகர் முன்பு அடையாரே 
நீதம் உறைய ஏகம் மறையே
நிறையம் மறைய ஏகம் மறையே
நிதானப் பரமே திரித்துவமே
நேயப் பரமே திரி அத்துவமே
ஏததானம் சொல் அனாரே 
யேசு நாதர் சொன்னாரே
எந்தை பிதாவே வா வாவே
ஏயோவாவே கா காவே."  

சொற்பொருள் : 

சுவாபம் - இயல்பு
உபையார்த்தம் - உப அர்த்தம் ,  இருபொருள். (உப - இரண்டு , இணை , இரட்டை.) 
பாட்டா - பாட்டன் , பாடுபட்டவன் , பாட்டுக்கு (பாடலுக்கு) உரியவன் 
ஆட்டா - ஆடு - ஆடானவன்
ஓர் அன்பு ஆட்டா - ஓர் அன்புடைய ஆடு ,   அன்பு கொண்ட அடிக்கப்பட்ட ஆடே
மெஞ்ஞானம் - மெய்ஞானம் , உண்மை ஞானம்
ஆரணம் - வேதம் , மறை 
பரிசனை - பழக்கம்
அனை - தாய்
பாதுகா - பாதுகாப்பு
கா - வனம், காவல்
பரமகா - பரம பூங்காவனம்
பட்டாரகர் - கடவுள் , குரு , தூதர் 
பட்டார் - வீழ்ந்தார் , செத்தார் 
படையார் - வீரர் , படைவீரர் 
நீதம் - நீதி , நன்னெறி 
மறை - இரகசியம், சொல், வேதம் 
நிரையம் - நரகம்
திரித்துவம் - முத்தத்துவம் - பிதா, குமாரன், தூயாவி
நேயம் - அன்பு 
அத்துவம் - ஒன்றிப்பு
ஏதன் - மூலகாரணன், ஆதிகாரணன்
சொல் - புகழ் 
எந்தை - என் தந்தை 
ஏயோவா - யேகோவா - நித்திய ஜீவனுள்ள கர்த்தர். 

பொருள் விளக்கம் : 

     வேதநாயகன் பாட்டுக்கு உரியவரே, மிகவும் பாடுபட்ட ஓர் அன்புடைய ஆட்டை உடையவரே , ஆடாக இருப்பவரே ;
     மெய் ஞானத்துக்குக் காரணமானவரே, மேன்மை பொருந்தியவற்றிற்கு வேதமாய் விளங்குபவரே ;
     பாதுகாப்பதை பழக்கமாக கொண்டவரே , பரம பூங்காவனமே ,  பண்புடைய தாயே ; 
     தூதர்களின் முன் படைவீரராய் இருப்பவரே, செத்தவருக்கு ஒப்பானவர்களின் முன்பு அடைப்பட்டிருக்கக் கூடாதவரே; 
     நீதி நிலைத்திருக்கும் இரகசியமே தலைமையான சொல்லே, நரகத்தை மறைக்கும் ( நரக ஆக்கிணைக்கு விலக்கி காக்கும்) ஒரே வேதமே ; 
     நிலைத்திருக்கும் நிச்சயமான பராபரமே முத்தத்துவமே (பிதா, குமாரன், தூயாவி) , அன்பின் பெரும் அழகே மூன்றில் ஒன்றாய் ஒன்றித்து இருப்பவரே ; 
     புகழ்ச்சியின் ஆதிகாரணராகிய அன்பே, யேசுநாதர் சொன்னாரே ; 
     என் தந்தையாம் பிதாவாகிய பராபரனே வந்தருளும் வந்தருளுமே , ஏயோவாவே , யேகோவாவே , நித்திய ஜீவனுள்ள கர்த்தாவே காத்தருளும் காத்தருளுமே. 
    
பரமன் பணியில்
சங்கை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர்.
08.04.2020.

M11

வே.சா. , முத்திரையடி 12.
ஜெபமாலை 8 , கவி 11.

கிறிஸ்துவின் சுவாப மகிமை

"சாதி யாவையுந் தான் புரந்து ஆளவே
மாது மா மரியாளிடம் வந்தவா
வேதநாயகன் பாடலை மேவிய
ஏதம் அற்ற இறைக் கிறிஸ்து ஏசுவே". 

சொற்பொருள் : 

சாதி - மக்கள்
புரந்து - காத்து , இரட்சித்து
மேவிய - விரும்பிய
ஏதம் - குற்றம்
ஏதம் அற்ற - குற்றம் குறை இல்லாத 

பொருள் விளக்கம் : 

     உலக மக்கள் அனைவரையும் தானே இரட்சித்து ஆளுகை செய்யவே , வரம்பெற்ற பெண்ணாகிய மரியாளிடம் பிறந்து வந்தவரே , வேதநாயகன் பாடலை விரும்பிய குற்றமற்றவராகிய இறைவன் ; கிறிஸ்து இயேசுவே. 

பரமன் பணியில்
சங்கை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர்.
18.04.2020.

M12

வே.சா. , முத்திரையடி 13.
ஜெபமாலை 9 , கவி 11. 

பரிசுத்தாவியின் சுவாப மகிமை 

"போதமே இதமே மேலாம் 
புத்தி யோசனையே  பொற்பே
நாதமே சிதமே ஞான 
நன்மையே நலமே நட்பே
வேத நாயகனுக்கு என்றும்
வெளிப்படு மெய்ப்புறாவே
ஆதமா பரிசுத்தாவி 
அர்ச்சய தேவ தேவே". 

சொற்பொருள் : 

போதம் - அறிவு , ஞானம்
இதம் - இனிமை
பொற்பு - அழகு , பொலிவு
நாதம் - ஒலி , இசை, சத்தம்
சிதம் - வெண்மை
ஆதமா - ஆத்துமா , உயிர்
அர்ச்சயம் - வணக்கம்
புறா - மத்தேயு 3: 16. ......... தேவ ஆவி புறாவைப்போல இறங்கி , தம்மேல் வருகிறதைக் கண்டார். 
       மாற்கு 1 : 10. .......... ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். 

பொருள் விளக்கம் : 

     தூய ஆவியானவரின் இயல்புகள் என்று சாஸ்திரியார் இக்கவியில் கூறுவது , போதிக்கும் அறிவுள்ளவர் , இனிமையானவர் , மேன்மைப் பொருந்திய புத்தியுள்ள சிந்தனையாளர் , அழகுள்ளவர் , ஒலியானவர் (வார்த்தையானவர்) , வெண்மையுடையவர் (தூயவர்) , ஞானத்தினால் விளையும் நன்மையை அருள்பவர் , நலம் தரும் நட்பானவர் , அவர்தாம் வேதநாயகனுக்கு என்றும் வெளிப்படுகிறவராகிய மெய்ப்புறா . அவரே உயிராய் வணங்குதற்கு உரிய தேவாதி தேவனாகிய பரிசுத்த ஆவி . 

பரமன் பணியில்
சங்கை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர். 
19.04.2020.

M13

வே.சா., முத்திரையடி 14. 
ஜெபமாலை 10, கவி 13. 

அகப்பற்று 
(மன விருப்பம்)

" கூகாலம் ஆள வரும் ஆமனான
அல்பா ஒமேகா வெனுஞ்
சொக்காதி மூலவஸ்து ஏக தேவ
சுயம்பாயிருந்த ஒளிவு
மிக்காய் உரைத்த கவி வேதநாயகன்
பாடும் மேலாம் பொருள்
மைக்காடு  அறுத்த குரு வேசுநாதர்
வரவேணும் என்றன் அகமே ." 

முன் விளக்கம் : 

      இந்த ஜெபமாலையில் 13 கவிகள் உள்ளன. தமிழ் உயிரெழுத்து 12ல்  ஒவ்வொரு எழுத்தையும் கவியின் முதல் சொல்லின் ஆதியாகக் கொண்டு 12 கவிகளை பாடியுள்ளார் சாஸ்திரியார். 

அ - அறிவே மெய்ஞானம் ....
ஆ - ஆதாம் விழுந்த வினை .....
இ - இதமென்று மாதர் .....
ஈ - ஈராறு சீடர் ....
உ - உலகம் பசாசு .....
ஊ - ஊழித்து வாந்தத் துரோகம் ....
எ - எட்டாத வானில் ......
ஏ - ஏகாமல் ஆவி தடுமாறி ....
ஐ - ஐயாறு வெள்ளி விலை .....
ஒ - ஒரு காசதேனும் ....
ஓ - ஓசைக் கடற்குள் .....
ஔ - ஔவை தயாபர .....
     என்று ஒவ்வொரு கவியும் தொடங்குகிறது. 

      13 வது கவியில்தான் சாஸ்திரியார்  'முத்திரையடி'யை பதித்துள்ளார். 13 வது எழுத்தை ' ஃ ' எனக் குறிப்பிடுவோம். இதை ஆயுத எழுத்து என்போம். ஒளவையார் எழுதிய ஆத்திச்சூடியை படித்திருப்போம். ஆயுத எழுத்திற்கு ஔவையார் " அஃகஞ் சுருக்கேல்" என்று பாடியிருப்பார். அதற்கு ' அதிக இலாபத்திற்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே ' என்று பொருள் கூறப்படுகிறது. 
    இங்கே சாஸ்திரியார்  ' ஃ '  என்ற எழுத்திற்கு பதிலாக  ' கூ '  என்ற எழுத்தை பயன்படுத்தி  " கூகாலம் "  என்ற சொல்லால் இந்த 13 வது கவியை தொடங்குகிறார். 
    " ஃ "  = " கூ " ( க் + ஊ ) என்று எழுத்துரு (எழுத்து வடிவம்) கூறுகிறது தமிழ் மொழி அகராதி.  ஆகவேதான் அந்த இலக்கண மரபில் சாஸ்திரியாரும்  ' கூ '  என்ற எழுத்துறுப்பைக் கொண்டு  " கூகாலம் "  என்ற சொல்லை கையாண்டுள்ளார். அப்படியானால்  ' கூகாலம் '  என்ற சொல்லின் விளக்கம்? ! ஆயுத எழுத்தை " அக்கனா "  என உச்சரிப்பது உண்டு. அதனடிப்படையில் ' அக் + காலம் ' என்று பகுத்து பொருள் கொள்ளலாம்.  
     ஜெபமாலையை திறனாய்வு செய்த மறைதிருவாளர் சி. வி. சவரிமுத்து அடிகளார் , இச்சொல்லுக்கு  "இக்காலம்"  என்ற பதிவை முன்வைக்கிறார். 
    கூகாலம் என்பதற்கு அக்காலம் , இறையரசின் காலம் , வருங்காலம் , கூக்கரலின் காலம் என பல வழிகளில் பொருள் கூறி விளக்கம் கூறலாம் என்றபொழுதிலும் , இக்கவியின் பொருள் எக்காலத்தும் பொருள்படும் படி  " அக்காலம் "  என்ற அர்தத்திலேயே இக்கவிக்கு பொருள் கூற விழைகிறேன். 

சொற்பொருள் : 

அகப்பற்று - மனவிருப்பு - மனவிருப்பம் 
கூ - பூமி, கூக்குரல், கூவுதல்
ஆமன் - ஆமென் - ஆமேன் - அப்படியே ஆகக்கடவது
அல்பா - கிரேக்க மொழி அகரவரிசை முதல் எழுத்து
ஒமேகா - கிரேக்க மொழி அகரவரிசை இறுதி (24வது) எழுத்து
(அதாவது தொடக்கமும் இறுதியும் - ஆதியும் அந்தமும்)
சொக்கம் - அழகு, கலப்பின்மை, தூய்மை
வஸ்து - பொருள்
ஆதிமூல வஸ்து - ஆதிமுன் இருந்த காரண கர்த்தர்
சுயம்பு - சுயாதீனம், தானாகவாதல் , தானாக தனித்த நிலை
ஒளிவு - மறைவாக
மை - இருள், கறுப்பு, குற்றம்
மைக்காடு - இருள் சூழ்ந்த இடம், பாவமாகிய இருள் நிறைந்த உலகம்
அகம் - ஆன்மா, மனம்

பொருள் விளக்கம் : 

    அக்காலத்தில் (வருங்காலம் , இறையரசு காலம் , கூக்குரலின் காலம்) ஆளவருகிறவராகிய கடவுள் , என் வேண்டுதலை ஏற்று அப்படியே ஆகக்கடவது என்று அருள் செய்ய விரும்புபவர் ; ஆதியும் அந்தமுமாய் இருப்பவர் ; கலப்பில்லாத தூயவரும் அழகுள்ளவருமாகிய ஆதியில் இருந்த முதன்மைப் பொருளாகிய பராபரன் - ஆதி பிதாவானவர் ; ஒரே கடவுளாய் தானாய் தனித்து மறைந்திருந்தவர் ( மறைவாய் இருந்தவர்) ;  மிகுதியாய்  சொல்லிய கவிஞன் வேதநாயகன் தன் பாடலில் மேலாய் வெளிக்காட்டிய மெய்ப்பொருளாகிய பராபரன் தானே. அவரே இந்த இருள் சூழ்ந்த உலகின் பாவக் கட்டை அறுத்த - அழித்த குருவாகிய இயேசு நாதர்.  அவரே என் உள்ளத்தில் வரவேண்டும்.  என் பாவ இருள் அகல வேண்டும்.  இதுவே என் உள்ளத்தின் விருப்பம். 

பின் விளக்கம் : 

     இச்சிறு விளக்கம் கூற ஏன் இவ்வளவு பெரிய முன்விளக்கம் ? என்று நீங்கள் நினைக்கலாம்.  அதுசரி பின்விளக்கம் ஏன் ?  என்றும் கேட்கலாம் ஆம் இன்றைய கவி பாடலுக்கும் , அன்றைய கவி பாடலுக்குமான வேற்றுமை அதன் கருத்து ஆழம். மேலோட்ட சிந்தனை - விளக்கம் இதற்கு உதவாது.  தமிழ் மொழி தமிழ் கிறிஸ்தவர்களுக்கு அந்நியமாகிப் போனது ஒரு காரணம்.  நானும் உங்களில் ஒருவனே !   தமிழ் மொழி  இலக்கியத்தில் பட்டம் பெற்றவனேயன்றி ; கரை கண்டவனும் அல்ல, அறிஞனும் அல்ல.  ஆனாலும் கிறிஸ்துவை சாஸ்திரியாரின் இலக்கிய படைப்புகள் வழியாக பார்க்க  தொடங்கியிருப்பவனே. சாஸ்திரியார் தன் படைப்புகளில்  இறைக் கோட்பாடுகள் , இறைத் தத்துவங்கள் , இறையியல் ஞானம் ,  இலக்கியமரபுகள் , இலக்கிய நயம் , இறை பக்தி , சுய அநுபவங்கள் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தியுள்ளார்.   சாஸ்திரியாரின் கவிகளில் ஒன்றை மட்டும் எடுத்து அதற்கு பொருள் கூறுவது முழுமைபெறாது.  அது சங்கிலித்தொடர் பொருள் உடையது.  இன்றைய சூழலில் சாஸ்திரியார் படைப்புகளை கூறி விவரிப்பதற்குக்  காரணம் கிறிஸ்துவை , கிறிஸ்தவத்தை ஆழமாய் அறியவும் ;  இறை நம்பிக்கை அதன் தத்துவங்களை பக்தி நெறியில் நின்று எப்படி பெருக்கிக் கொள்வது என்பதை சிந்திக்கவும் சாஸ்திரியாருடைய அநுபவங்கள் உதவும் என்பதற்காகவே.  உலகிலுள்ள சமயங்களில் (Religion) கிறிஸ்தவமும் ஒன்று என்று பிறரைப் போல்  நாமும் கடந்து போவது அல்ல.  அதன் உட்கூறுகளை நன்றாக ஆராய்ந்து விளங்கிக் கொள்வதற்கும் தான்.  நாம் புதுக் கிறிஸ்தவர்கள் அல்ல.  வளரும்  குழந்தைக்கு மீண்டும் மீண்டும் பால் ஆகாரமே கொடுப்பது எப்படி ஆரோக்கியமான நடைமுறையாக இருக்க இயலாதோ ; அதுபோலத்தான் ஆன்மிக வாழ்விலும்.  அடுத்தடுத்த பக்தி விசுவாச ஆன்மிக நிலைகளை நோக்கியதாய் நமது கிறிஸ்தவ வாழ்வு அமைய வேண்டும்.  அதைத்தான் சாஸ்திரியாரும் தம்படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார்.  ஆன்மிக பக்தி படிநிலைகளைக் குறித்து முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன் . 
      ஆகவே இதற்காகத்தான்  நீண்ட நெடிய முன் பின் விளக்கம் தேவைப்பட்டது.  அதனால் இத்தனை அளவு இதனை பதிவு செய்தேன். ஊன்றி  படித்துத் தெளிந்த உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி. 

பரமன் பணியில்
சங்கை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர்.
23.04.2020.

M14

வே.சா. முத்திரையடி 15. 
ஜெபமாலை 11, கவி 11 

மன்றாட்டு

" நிலையாத மா கொடிய அநியாய வாழ்வதனை 
நிசமாக நாடி நிதமே
துலையாத பாவவழி தனில் ஓடி வாடி உடல் 
சுடு தீயில் வீழ்வது இயல்போ?
கலையாது நேர் அடிகள் தவறாது பாடிவரு(ம்) 
கவி வேத நாயகனையே
மலையாது சீவனதுபெற நீடுவாய் கருணை 
மலையே, மகத்துவ பரனே . " 

சொற்பொருள் : 

துலையாத - தொலையாத
சுடு தீயில் - நரகத்தில்
மலையாது - தடுமாறாது
சீவன்(ஜீவன்) - நித்திய ஜீவன்
நீடுவாய் - நீடியகாலம் இருக்க வைப்பாய் , நீடிய வாழ்வை அருளுவாய்
மகத்துவம் - மேன்மை
பரனே - பரத்தில் இருப்பவனே , பரலோகில் இருப்பவனே

பொருள் விளக்கம் : 

     வாழ்வு நிலையில்லாதது , மகா கொடியது , அநியாயமானது (நீதியற்றது) ; இதனை உண்மையாக நினைத்து தினமும் ஒவ்வொரு மணிநேரமும் தேடி ஓடி , தொலைக்க முடியாத இப்பாவ வழியில் - வாழ்வில் நின்று வாடி ; இறுதியில் இவ்வுடல் சுட்டெரிக்கும் அக்கினி நரகத்தில் வீழ்வதுதான் இயற்கையோ? அது சரியோ?
     குலையாத நேர்மையுடன் இறை நெறி தவறாது பாடல்கள் பாடி வரும் கவிஞன் வேதநாயகனை ; தடுமாற்றம் கொள்ளச்  செய்யாமல் , பரம வீட்டில் நித்திய ஜீவனைப்பெற்று நீடிய காலம் இருக்க வைப்பாய் ; மலை போன்ற கருணை உள்ள , மேன்மைப் பொருந்திய   பரலோக அதிபனே. 

பரமன் பணியில்
சங்கை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர்.
25.04.2020.

M15

வே.சா. , முத்திரையடி 16. 
ஜெபமாலை 12, கவி 11

சத்துரு நாசம் 

" தினம் மாய சொற்பன வாழ்வையே
திடமாம் என மடமாகிய 
கனமான பாதகன் மீதிலே
கடியால் வரும் இடிநீர் ஐயா
அனமாள் தரு(ம்) மரி மைந்தனா
அடி வேதநாயகன் வந்தனா 
சனமானவா இனமானவா 
சருவேசுரா சருவேசுரா ".

சொற்பொருள் : 

சத்துரு - பகைவன்
நாசம் - அழிவு 
சொற்பனம் - சொப்பனம் - கனவு
மடம் - மடமை - அறிவின்மை
கனம் - பாரம் , மிகுதி , வன்மை
பாதகன் - துரோகி
கடி - பிசாசம் - பேய்
இடிநீர் - இடித்து பெய்யும் மழை , இடியுடன் கூடிய மழை
அனமாள் - அன்னாள் (ANNA) - லூக்கா 2 : 36 - 38.
அடி - அடியோர் , அடியவர்
வந்தனா - வணங்கப் படுபவனே 
சருவேசுரா - கடவுள். ( ' சருவ  ஐஸ்வர்யம் உள்ளவரே ' என்று சி.வி. சவரிமுத்து அடிகளார் பொருள் கூறுகிறார்.)

முன் விளக்கம் : 

      " அனமாள் தரு மரி மைந்தனா " என்று ஒரு வரி உள்ளது.  ' அனமாள் ' என்ற சொல் , லூக்கா 2 : 36 - 38 - ல் உள்ளதுபடி அன்னாள் (Anna) என்ற தீர்க்கதரிசியை குறிக்கின்றது. 
      மரியாளும் யோசேப்பும் குழந்தையாகிய இயேசுவை எருசலேமுக்கு கொண்டு போனார்கள். அங்கே எருசலேம் தேவாலயத்திற்கு  தூயாவியின் ஏவுதலினால் வந்திருந்த சிமியோன் என்பவர் ,   இயேசுவை கையில் ஏந்திக் கொண்டு , தேவனைத் தோத்தரித்து பாடி , தீர்க்கதரிசனம் உரைத்தார் (லூக்கா 2 : 24 - 35) . அதைத் தொடர்ந்து (வசனம் 36 - 38 ) ஆசேருடைய கோத்திரத்தாளும் , பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் (Anna) என்னும் 84 வயதுள்ள தீர்க்கதரிசி அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து , எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் இயேசுவைக் குறித்துப் பேசினார்.
      இந்த நிகழ்வை சுட்டிக்காட்டியே சாஸ்திரியாரும் , ' அன்னாள் சாட்சி தந்த மரியாளின் மகனானவரே ' என்று இங்கே இயேசுவை அடையாளப்படுத்துகிறார். 

பொருள் விளக்கம் : 

      தினம் தினம் பொய் நிறைந்த கனவு போன்ற வாழ்வையே உறுதியானது நிலையானது என்று மடமையினால் (அறிவின்மையினால்) நான் நினைத்தேன் , இவை பெரும் துரோகியான என்மீதில் பிசாசினால் வரும் இடியுடன் கூடிய மழை போன்றவை ஐயா ; 
      அன்னாள் (ANNA) எனும் தீர்க்கதரிசி  (லூக்கா 2 : 36 - 38.) சாட்சி தரும் மரியாளின் மகனானவரே , உனது அடியவன்  வேதநாயகனால் வணங்கப்படுபவனே , எனக்கு ஜனமும் இனமுமானவர் (சாதி ஜனம் ) நீரே ,  என் கடவுளே , பகைவரை வீழ்த்தி மெய்வாழ்வு அருளும் சருவேசுரா சருவேசுரா . 

பரமன் பணியில்
சங்கை . நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர்.
01.05.2020.

M16

வே.சா., முத்திரையடி 17. 1. 
ஜெபமாலை 13, கவி 11

கிறிஸ்துவின் தாழ்மை 

" ஆதி நாயகா நீதி நாயகா
அளவில்லாத மெஞ் ஞான நாயகா
சோதி நாயகா இயேசு நாயகா
சொருப நாயகா அருப நாயகா
சாதி நாயகா தேவ நாயகா
சருவ நாயகா பொறுமை நாயகா
வேதநாயகா என்றெனக்கு அருள்
வேத நாயகா வேத நாயகா ".

சொற்பொருள் : 

நாயகா - எப்பொருட்கும் இறைவனே , அரசனே
சோதி - ஜோதி - ஒளி , வெளிச்சம்
சொருபம் - உருவம்
அருபம் - அரூபம் - உருவம் அற்றது
சருவம் - சர்வம் - முழுவதும் , எல்லாம்
வேதநாயகா - வேதத்தின் நாயகனே

பொருள் விளக்கம் : 

      ஆதியிலே இருந்தவர் , நீதியானவர் , அளவில்லாத மெய் ஞானம் உள்ளவர் , ஒளியானவர் (வெளிச்சம்) , இயேசுவாகிய மீட்ப்பரானவர் , உருவம் உள்ளவர் , உருவம் அற்றவர் , இனமானவர் , தேவனானவர் , எல்லாவற்றுக்குமானவர் , பொறுமை உள்ளவர் , அப்படிப்பட்ட வேதத்தின் நாயகனே அரசனே இறைவனே ;  வேதநாயகனாகிய எனக்கு என்றென்றைக்கும் அருள் செய்வாயாக.

பின் விளக்கம் : 

     இக்கவியின் பொருள் எளிமையானது. ஆனால் கருத்து ஆழமானது. 'கிறிஸ்துவின் தாழ்மை' என்ற தலைப்பில் அமைந்த இந்த ஜெபமாலை, கிறிஸ்து பரத்தின் மகிமையை விட்டு இறங்கி மனிதனாய் தாழ்மையானார் , தன்னைத் தாழ்த்தினார். ஆனால் அவரே மகிமையின் ஆண்டவர். இதை சாஸ்திரியார் இந்த 13 வது ஜெபமாலையில் வலியுறுத்துகிறார். இந்த ஜெபமாலை , விரோத அணி அல்லது முறண்தொடை அணி எனும் தமிழ் இலக்கண விதியின் கீழ் அமைந்துள்ளது . அதாவது எதிர் எதிர் தன்மை - கருத்து கொண்டு பாடப்பட்டவை. இந்த கவியில் ,

' சொருப நாயகா அருப நாயகா ' 

மற்ற கவிகளில் ,

' தேவனான நீ மனுடனாகினை '

' படி சிரிக்க நீ அழுது கொண்டதும் ' 

' மண்ணுளோர்களும் விண்ணுளோர்களும் ' 
      
      இவ்வாறு உருவம் - உருவம் அற்றது , தேவன் மனிதனாவது , சிரிப்பது அழுவது , மண்ணில் உள்ளவர் - விண்ணில் உள்ளவர் என்று இப்பாடல்களின் சிறப்பு அமைந்துள்ளது. இது இலக்கியமும் இறையியலும் சார்ந்தது.
       இறையியல் ஆழத்தை பதிந்தால் - பகிர்ந்தால் மட்டுமே இப்பகுதி முழுமையடையும். ஆனால் அதை முழுமையாக இப்பகுதியில் கொடுக்க இயலாது. அதன் முன் அறிமுகமும் விளக்கமும் தந்து , அடுத்த பதிவில் அதன் தொடர்ச்சியை தருகிறேன். 
      கிறிஸ்தவத்தின் முக்கிய கோட்பாடு பிதா - குமாரன் - பரிசுத்த ஆவி என்பதாகும். அதன் புரிதல் கிறிஸ்தவத்தில் இன்று உள்ளதா என்ற கேள்விக்கு நாமே பதில் கூற வேண்டியவர்கள் . இதை  "திரித்துவம்" ( TRINITY ) என்று  வழங்குவோம். ஆனால் திருமறையில் இந்த சொல் கிடையாது. ஆனால் அதற்கான முன்மொழிவுகள் சொல்லப்பட்டுள்ளன. திருச்சபை நாட்காட்டி (Church Calendar) முறையில் பண்டிகை முறை வகுக்கப்பட்டிருக்கும் . அதில் இந்த திரித்துவ பண்டிகை Trinity Sunday மிக முக்கியமானதாக கருதப்பட்டு வந்தது , இன்றும் அப்படியே வழக்காற்றில் உள்ளது என்றும் நம்புகிறேன் . 
      முன்நிலை திருச்சபைகளில் (Main Line Church ) வழிபாடுகளில் வழங்கிவந்த பல வழிபாடு முறைகள் இன்று சில திருச்சபைகளில் மறைந்து மக்கிப்போனது. அதில்ஒன்றுதான் இந்த திரித்துவத்திற்கான தத்துவ சித்தாந்தம். 
      அதநாஷியஸ் என்பவரின் விசுவாசப் பிரமாணம் ( THE ATHANASIAN CREED ) பிதா குமாரன் பரிசுத்த ஆவி பற்றிய தன்மையை கூறுகிறது. அதில் சிலவற்றை உங்கள் முன் வைக்கிறேன்.

 அதநாஷியஸ் விசுவாசப் பிரமாணம் : 

1. இரட்சிப்படைய விரும்புகிறவன் எவனோ : அவன் திருச்சபைக்குரிய பொதுவான விசுவாசத்தை எல்லாவற்றிலும் முதன்மையாய்ப் பற்றிக்கொள்ளவேண்டும் . 
5. பிதாவானவர் ஒருவர் , குமாரனானவர் ஒருவர் , பரிசுத்த ஆவியானவர் ஒருவர்.
6. ஆனாலும் பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் : ஒரே வேதத் தன்மையும் சம மகிமையும் சம நித்திய மகத்துவமும் உண்டு.
15. அப்படியே பிதா தேவன் , குமாரனும் தேவன் , பரிசுத்த ஆவியும் தேவன் .
16. ஆகிலும் மூன்று தேவர்களில்லை : தேவன் ஒருவரே . 
25. அன்றியும் இந்தத் திரித்துவத்தில் ஒருவரும் முந்தினவரும் அல்ல , பிந்தினவரும் அல்ல : ஒருவரில் ஒருவர் பெரியவரும் அல்ல , சிறியவரும் அல்ல. 
26. மூவரும் சம நித்தியரும் : சரிசமானருமாம் . 
27. ஆதலால் மேற்சொல்லியபடி , எல்லாவற்றிலும் : ஏகத்துவத்தை திரித்துவமாகவும் , திரித்துவத்தை ஏகத்துவமாகவும் வணங்க வேண்டும். 
28. ஆனபடியால் , இரட்சிப்படைய விரும்புகிறவன் : திரித்துவத்தைக் குறித்து இப்படியே நினைக்கவேண்டும். 
42. திருச்சபைக்குரிய பொதுவான விசுவாசம் இதுவே : இதை ஒருவன் உண்மையாய் விசுவாசிக்காவிட்டால் இரட்சிப்படையான் . 
     
      இத்தகைய புரிதலும் விசுவாசமும் நமக்குள் இருந்தால் , நம்முள் குழப்பமும் பிரிவினையும் பிளவும்  ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் திரித்துவத்தையும் (மும்மைத்தன்மை) ,  திரியேகத்துவத்தையும் (மூன்றில் ஒன்றான தன்மை) பற்றிய சிந்தையில் வளர உயர பெருக பராபரனின் அருளை நாடுவோம் . 
       தொடர்ந்து இக்கவியின் இறைத்தன்மைகளை அதாவது கிறிஸ்துவானவர் பிதாவுக்கு  "சம நித்திய மகத்துவம்"  கொண்டவர் என்பதை பற்றிய திருமறை வாக்கின்   அடிப்படையில் அடுத்த பதிவில் பகிர்ந்துக் கொள்கிறேன். 

பரமன் பணியில்  
சங்கை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர். 
03.05.2020.

M17.1

வே.சா., முத்திரையடி 17. 2. 
ஜெபமாலை 13, கவி 11. 

கிறிஸ்துவின் தாழ்மை 

தொடர்ச்சி ..........

      முந்தைய பதிவில் சொல்லப்பட்டதின்படி இக்கவியின் பொருளுக்கு வேத ஆதாரங்களை கூறி , சிந்தனைக்கு அழைக்கிறேன். முன் அறிந்தபடி பிதாவின் சம நித்திய மகத்துவத்திற்கு ஒத்த கிறிஸ்துவை காட்டுவதே இப்பகுதியின் நோக்கம். பிதாவின் அடையாளமாக சொல்லப்பட்டவைகளுக்கு உரியவரும் ,  தீர்க்கர்களினால் உரைக்கப்பட்டவருமாகிய கிறிஸ்து இவரே என்பதை வெளிப்படுத்தவும் எண்ணுகிறார் சாஸ்திரியார்.  திரித்துவத்தின் அடிப்படை நோக்கமும் அதுவே. திரித்துவத்தைக் குறித்து அறிவது சற்று கடினமே. ஆனாலும் அது முக்கியமே. நாம் தூயாவியானவரின் துணை நாடி நிற்போம் , அவர் நமக்குப் போதிப்பார். 

1. ஆதி நாயகா : 
ஆதியிலே வார்த்தை இருந்தது , அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது , அந்த வார்த்தை தேவனாயிருந்தது. ...... யோவான் 1 : 14. மேலும் யோ.1 : 1 - 14 வரை உள்ள வசனங்களை வாசிக்கவும்.
 
2. நீதி நாயகா : 
நீதியை நிறைவேற்றுபவர். மத். 3 : 15.
நீதிமான். மத். 27 : 19 , 24 ;  லூக். 23 : 47.
நீதி செய்கிறவர். யோ. 5 : 30.
நீதியுள்ளவர். அப். 3 : 14. 

3. அளவில்லாத மெய் ஞான நாயகா : 
ஞானமானவர். மத். 11 : 19 , 13 : 54 . மாற்கு 6 : 2 , லூக். 7 : 34 , 35. 
ஞானமே ஆனவர்.  மத். 12 : 42 ,  லூக். 11 : 31.
ஞானம் நிறைந்தவர். லூக். 2 : 40 , 52.
தேவ ஞானம் (இயேசு கிறிஸ்து) . லூக். 11 : 49. 
(அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்துவினால் ஏற்படுத்தப்பட்டவர்கள். ஆகையால் கிறிஸ்து தம்மை ' தேவ ஞானம் ' என்று கூறி மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்.)

4. சோதி நாயகா :
(ஜோதி - ஒளி - வெளிச்சம்)
பிரகாசிக்கிற ஒளி . லூக். 2 : 30 , யோ. 1 : 5. 
மனுஷருக்கு ஒளி - ஜீவ ஒளி . யோ. 1 : 4, 8 : 12. 
சாட்சியின் ஒளி . யோ. 1 : 7. 
உலகத்தின் ஒளி . யோ. 8 : 12 , 9 : 5 , 12 : 46. 
விசுவாசத்திற்குரிய ஒளி - உடன் இருக்கும் ஒளி . யோ. 12 : 36. 
மெய்யான ஒளி . யோ. 1 : 9. 

5. இயேசு நாயகா : 
இயேசு என்று பேரிடுவாயாக. மத். 1 : 21. 

6. சொருப நாயகா - உருவம் - மாம்சம் (சரீரம்) - இரத்தம் . 
என் மாம்சம் மெய்யான போஜனம் , என் இரத்தம் மெய்யான பானம். யோ. 6 : 55. 
அந்த வார்த்தை மாம்சமானார். யோ. 1 : 14. 
(மேலும் , அப். 2 : 29 - 31. - ல் தாவீதின் தீர்க்கதரிசன குறிப்பும் ஒப்புநோக்கத்தக்கது.) 

7. அருப நாயகா - அரூபம் , உருவம் அற்றது (உருவமற்ற நாயகா) : 

(இயேசுவின் மரணத்திற்கு முன்பு ......)
..... இயேசு மறைந்து , அவர்கள் நடுவே கடந்து . தேவாலயத்தை விட்டுப்போனார்.  யோ. 8 : 59. 

(இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு .....)
....... அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு , அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.  லூக். 24 : 31. 
மேலும் , அப். 9 : 4 , 5. வாசிக்கவும்...

8. சாதி நாயகா - யூதருக்கு இராஜா : 
யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே?  மத். 2 : 2. 
..... நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு : நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.  மத். 27 : 11. 
...... இயேசு முன்பாக முழங்காற்படியிட்டு : யூதருடைய ராஜாவே , வாழ்க என்று அவரைப் பரியாசம் பண்ணி , ......  மத். 27 : 29. 
...... இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி , அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.  மத். 27 : 37. 
...... நான் யூதருடைய ராஜாவை உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்களா என்று கேட்டான்.  மாற்கு 15 : 10. 
...... யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.  மாற்கு 15 : 12. 
யூதருடைய ராஜாவே , வாழ்க என்று அவரை வாழ்த்தி ,  மாற்கு 15 : 18. 
..... யூதருடைய ராஜா என்று எழுதி , சிலுவையின் மேல் கட்டினார்கள்.  மாற்கு 15 : 26. 

9. தேவ நாயகா : 
பிதாவின் கட்டளையை பெற்றவர்.  யோ. 10 : 18. 
பிதாவின் போதனையின்படி சொன்னவரும் செய்தவரும்.  யோ. 8 : 28. 
பிதாவினால் மகிமைப்படுத்தப்பட்டவர்.  யோ. 8 : 54. 
பிதாவை அறிந்தவர்.  யோ. 8 : 55. 
பிதாவினிடத்திற்கு அழைத்துச் செல்பவர்.  யோ. 14 : 6. 
பிதாவினால் வந்தவரும் அனுப்பப்பட்டவரும்.  யோ. 7 : 29. 
வானத்திலிருந்து இறங்கிய ஜீவ அப்பம்.  யோ. 6 : 51. 

10. சருவ நாயகா - எல்லாவற்றுக்கும் தலைவன் : 
பிதாவுக்கு ஒத்ததும் ஏற்றதுமான மகிமை.  யோ. 1 : 14. 
பிதாவுக்கடுத்தவைகளில் இருப்பவர்.  லூக். 2 : 49. 
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று.  யோ. 1 : 3. 
சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே.   1 கொரி. 15 : 27. 
குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.  1 கொரி. 15 : 28. 

11. பொறுமை நாயகா : 
நியாயம் செய்வதில் நீடிய பொறுமை உள்ளவர்.  லூக். 18 : 7. 
........ ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி , நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.  2 பேதுரு 3 : 9. 
நீடிய பொறுமையே இரட்சிப்பு.  2 பேதுரு 3 : 15. 
தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்த போது , பேழையிலே சிலராகிய எட்டு பேர் மாத்திரம் (நோவாவின் குடும்பம்) காக்கப்பட்டார்கள்.  1 பேதுரு 3 : 20. 
எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்.  லூக். 9 : 41., மாற்கு 9 : 19., மத். 17 : 17. 
தேவ தயவின் பொறுமையை அசட்டை பண்ணுகிறாயோ.  ரோமர் 2 : 4. 

12. வேத நாயகா - வேதத்தின் நாயகன் -  வேதத்தின் பொருள் : 
இயேசு : நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.  யோ. 14 : 6. 
இயேசு : உம்முடைய (பிதாவுடைய) வசனமே சத்தியம்.  யோ. 17 : 17. 

      இந்த திருமறை வசனங்கள் மட்டுமே அல்ல. நிறைய நீங்களும் அறிவீர்கள். என்னால் முழுமையாக திருமறை வசனங்களை பதிவு செய்ய இயலவில்லை. கருத்தையும் குறிப்பையும் மட்டும் குறிப்பிட்டுள்ளேன். உங்களுக்கு நேரம் வாய்க்கும்போது இந்த திருமறை குறிப்புகளை வைத்துக்கொண்டு உங்கள் திருமறையை எடுத்து வைத்து நேரிடையாக வாசித்து அறியுங்கள். அது இன்னும் உங்களுக்கு பயனுள்ளதாகவே அமையும். திரியேக கடவுள் உங்களுக்கு அருள் செய்வாராக. 

      பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் திரியேக  திருப்பெயரில் ஆமேன். 

பரமன் பணியில் , 
சங்கை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர். 
05.05.2020.

M17.2

வே.சா. , முத்திரையடி 18.
ஜெபமாலை 14, கவி 11 

பாவ சங்கீர்த்தனம் 

" ஆதி ஏவை செய்த பாவம் அகலவந்த தந்தையே
அவனிமீது மனுடனாக அவதரித்த விந்தையே
தூதர் சேனை பாடி ஆடு(ம்) தோத்திரக் கருணாகரா
சோதியே அனாதியே  தூய தற் பராபரா
வேதநாயகன் சொல் பாவின் மேல் உலாவும் ஈசனே
மிக்க பாவ நாசனா பக்கிஷக் கிருபாசனா
ஏதமன்றி வாழ்க உன்றன் நீதி கொண்டு எனைப்புரந்து 
ஏகனுக்கு உரைக்க வேணும் யேசுநாத சுவாமியே."

சொற்பொருள் : 

சங்கீர்த்தனம் - சொல்லுகை , சொல்லுதல் , பாவ அறிக்கை
பாவ சங்கீர்த்தனம் - பாவத்தை சொல்லுதல் , பாவத்தைக் சொல்லி பாவ அறிக்கை செய்தல்
ஏவை - ஏவாள்
அவனி - பூமி
விந்தை - ஆச்சரியம்
கருணாகரா - கருணை உள்ளவன் 
சோதி - ஒளி , வெளிச்சம்
அனாதி - கடவுள் , தொடக்கம் இல்லாதது , ஆதியின்மை
தற்பரா - கடவுளே
உலாவும் - மெல்ல நடக்கும்
ஈசன் - அரசன் , எப்பொருட்கும் இறைவன் , கடவுள் , மூத்தோன்
நாசனா - அழிப்பவன்
பக்கிஷம் - பக்ஷம் - பட்சம் - நேசம் , நட்பு
கிருபாசனா - கிருபை , அருள் செய்யும் இடத்தில் இருப்பவன்
ஏதம் - குற்றம் , கேடு , துன்பம்
புரந்து - காத்து , இரட்சித்து
ஏகன் - ஒருவன் , கடவுள்

பொருள் விளக்கம் : 

     ஆதியில் ஏவாள் செய்த பாவத்தை அகற்ற வந்த தந்தையே , உலகத்தில் மனிதனாக அவதரித்த ஆச்சரியமே , தூதர் கூட்டம் பாடி ஆடி தோத்தரிக்கும் கருணை உள்ளவரே , ஒளியானவரே , தொடக்கம் (தோற்றம்) இல்லாதவரே , தூய தன்மையுள்ள பராபரனே , வேதநாயகன் பாடும் பாடலில் மேலாக இருந்து அசைவாடும்  எல்லா பொருளுக்கும் (உயிருள்ளதும் உயிரற்றதும்) இறைவனே , மிகுதியான பாவத்தை அழிக்க வல்லவரே , நேசமுள்ள கிருபை செய்யும் இடத்தில் இருப்பவரே , நான் குற்றமற்றவனாய் வாழ்வதற்கு உந்தன் நீதியை கொண்டு இரட்சித்தருள  ஒருவராய் வீற்றிருக்கும் பராபரனுக்கு சொல்ல வேண்டும் இயேசு நாத சுவாமியே  ( பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராகிய இயேசு கிறிஸ்துவே.) . 

     இக்கவியில் , கடவுளின் ஒன்பது தன்மைகளை கூறி அழைத்துப் போற்றி தன் வேண்டுதலை முன்வைக்கிறார் சாஸ்திரியார். 
1. தந்தை , 2. விந்தை , 3. கருணாகரா , 4. சோதி , 5. அனாதி , 6. தூய தற்பரா 7. ஈசன் , 8. பாவ நாசனா , 9. நேச கிருபாசனா. 

பரமன் பணியில் 
சங்கை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர்.
08.05.2020.

M18

வே.சா. , முத்திரையடி 19.
ஜெபமாலை 15., கவி 21. 

பாவ சங்கீர்த்தன கலம் 

" கலக்கமற்ற எனது ஆத்துமத்தை உன் கையில்
கையளித்து இவ்வுலகத்தை 
விலக்கமாய்ப் பிரிந்து மோட்ச ராச்சியத்தில்
மேவியான் வீற்றிருந்து அங்கே
துலக்க நித்திய சீவனைச் சுதந்தரிக்கத்
துணை எனக்கு அருளுதி ஐயா
இலக்கண வேதநாயகன் பாடும்
எந்தையே கருணை ஆதிபனே. "  

முன் விளக்கம் : 

      இந்த 15 - வது ஜெபமாலையின்  தொடக்கத்தில் " அஃது பாவ மன்னிப்புக்காகச் செய்யும் விபரமான செபம் ". என்ற முன் குறிப்பையும் ;  ஜெபமாலை இறுதியில் ,   " இஃது தரங்கன்பாடித் தென்மார்க்கு மிசியோனரிமார் ஞானோபதேசக் குறிப்பிடத்தின்படி பாடினது ",  என்ற  பின் குறிப்பையும் தருகிறார் சாஸ்திரியார்.  அதாவது ,   ' இது தரங்கம்பாடி டென்மார்க்கு மிஷனரிகளுடைய ஞான உபதேச குறிப்பு ( ஜெப ) புத்தகத்தில் உள்ள ஜெபத்தினை அடிப்படையாகக் கொண்டு பாடினது '.  முன்னதில் சொன்னபடி  ' பாவ மன்னிப்புக்காகச் செய்யும் விவரமான ஜெபம். '  
     
பாவ மன்னிப்பு ஜெபம் : 

       " இரக்கமுள்ள பராபரனே , ஏழைப் பாவியாகிய நான் உமக்கு முன்பாக விழுந்து , உம்முடைய கிருபையையும் பொறுமையையும் தேட வருகிறேன். நான் மனதினாலும் , வாக்கினாலும் , நடக்கையினாலும் வெகு விதமான பாவக் குற்றங்களைப் பண்ணினேன் என்று மனஸ்தாபப்பட்டு அறிக்கையிடுகிறேன்.  ஆ ! தயவுள்ள சுவாமி , நான் நரகத்தில் அழிவது நியாயமாயினும் , என்னை உமது சமூகத்தை விட்டுத் தள்ளாதிரும். தேவரீர் , என் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் மரணத்தையும் பார்த்து , நான் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து என்னை இரட்சியும் . நான் திரும்பப் பாவம் செய்யச் சோதிக்கப்படும்போது அதற்குச் சம்மதியாமல் , அதை அருவருக்கவும் , உமக்குப் பிரியமான பிள்ளையாக நடக்கவும் , உமது பரிசுத்தாவியைக் கொண்டு எனக்குப் புத்தியையும் பலத்தையும் தந்தருளும் , இனி நான் சாகும் வேளையில் உம்முடைய மோட்ச இராஜ்யத்தில் சேருவதற்கு என்னை ஆயத்தம் பண்ணியருளும் .  சுவாமி , ஆமேன் . " 

      இந்த ஜெபம் லுத்தரன் சபைகளில்  பயன்படுத்தப்பட்டு வந்தது. சாஸ்திரியாருடைய குடும்ப ஜெப ஒழுங்கிலும் பயன்படுத்தப்பட்டு , இன்றும் பயன்படுத்தப்பட்டும் வருகிறது. 

    இந்த பாவ அறிக்கை ஜெபத்தை விரித்துரைத்தும் ஏனைய ஜெப விண்ணப்பங்களை ஒருங்கிணைத்தும் இதன் கவிகளை பாடியுள்ளார் சாஸ்திரியார். 

சொற்பொருள் : 

கலம் - பாண்டம் , பாத்திரம்
மேவி - சேர்ந்து (சேர்தல்)
துலக்கம் - தெளிவு , பிரகாசம்
எந்தை - என் தந்தை , எமது சுவாமி
ஆதிபன் - அரசன் , எசமானன்

தலைப்பு விளக்கம் : 

      பாவ சங்கீர்த்தன கலம் என்பது 'பாவத்தைக் சொல்லி , பாவ அறிக்கை செய்யும் ஜெபங்களை உள்ளடக்கி வைத்துள்ள பாத்திரம் '. 

பொருள் விளக்கம் : 

     கலக்கமற்றவனாய் எனது ஆத்துமாவை உம் கையில் ஒப்புக்கொடுத்து , இவ்வுலகத்தை விட்டு விலகி , பிரிந்து மோட்ச இராஜ்யத்தில்  சேர்ந்து , அங்கே நான் தங்கியிருந்து ; பிரகாசம் மிகுந்த நித்திய ஜீவ வாழ்வை பெற்றுக்கொள்ள எனக்கு துணையாயிருந்து அருள்வாய் ஐயனே. வேதநாயகன் பாடும் வேதத்தின் இலக்கணமாகிய என் தந்தையே ! என் சுவாமியே ! கருணை மிகுந்த அரசனே (எஜமானனே) . 
      என்று பாடி மோட்ச இராஜ்யத்தில் சேரும்மட்டும் அருள் வேண்டி இந்த பாவ சங்கீர்த்தன கலத்தின் இந்த இறுதி கவியை நிறைவு செய்கிறார் சாஸ்திரியார்.  

பரமன் பணியில் , 
சங்கை. நோவா சாஸ்திரியார் 
தஞ்சாவூர். 
10.05.2020.

M19

வே.சா. , முத்திரையடி 20.
ஜெபமாலை 16., கவி 17. 
கிறிஸ்துவின் பாடுகளின் தேவாரம். 

" ஆதி மானிடர்கள் செய்த
  அகந்தையான் மனுடனாகிப்
  பாதகம் அனைத்துந் தீர்க்கப்
  பாடுபட்டு உயிரைத் தந்து
  வேதநாயகனும் வாழ்க
  மிக்க நன்று இயற்றினாப் போல்
  ஏதுமற்றவர் எம்மேலும் 
  இரங்குவாய் ஏசுநாதா . " 

சொற்பொருள் : 

* தேவாரம் - தேவ(ம்) + ஆரம். அதாவது தெய்வமாகிய கடவுளுக்கு அணிவிக்கப்படும் பூமாலை அல்லது முத்துமாலை. இங்கே கடவுளுக்கு அணிவிக்கப்படும் புகழ்மாலை  என்றும் பொருள் கொள்ளலாம்.

* அகந்தை - ' நான் '  என்னும் அகங்காரம் , செருக்கு , ஆணவம் , உட்கரணம் என்ற நான்கு குணங்களை உள்ளடக்கியது. இதில் ' உட்கரணம் ' என்பதற்கு அந்தக்கரணம் அதாவது மனம் , புத்தி , சித்தம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு என்பது பொருளாகும். 

* பாதகம் - பெரும் பாவம் (மா பாவம்)  , துரோகம்.

முன் விளக்கம் : 

      " ஆதி மானிடர்கள் செய்த அகந்தையான் " என்று இக்கவியைத் தொடங்குகிறார். ' பாவம் ' என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் " அகந்தை " எனும் சொல்லை கையாள்கிறார். அகந்தை என்ற வார்த்தைக்கு ஆங்காரம் , செருக்கு , கர்வம் எனப் பொருள் கொள்ளலாம். இன்னும் அந்தச் சொல்லுக்கு ஆழமாய் பொருள் விளக்கம் தேட விழைந்தால் ,

அகந்தை - " நான் " என்னும் அகங்காரம் , செருக்கு , ஆணவம் , உட்கரணம் என்ற நான்கு (குறை) குணங்களை உள்ளடக்கியது என்று கூறலாம். 
      உட்கரணம் என்பது அந்தக்கரணம் என்று பொருள். திருமறையில் , சங்கீதம் 51 : 6. " இதோ , உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர் ; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர் ". 
இந்த சங்கீதத்தை தாவீது எந்தச் சூழலில் பாடினார் என்பதை அறிவோம். 
அந்தக்கரணம் என்பது மனம் (Mind) , புத்தி (Wisdom) , சித்தம் (அறிவு) (Knowledge) ஆகியவற்றின் கூட்டுத் தன்மை. 
      பாவ அறிக்கை ஜெபத்தை நாம் சொல்லும் போது '  அறிந்தும் , அறியாமலும் ,  துணிகரமுமாய் '  செய்த பாவங்களை மன்னியும் என்று வேண்டுவோம்.  ' துணிகரம் '  என்ற சொல்லை முன்னிறுத்தி ,  ' அகந்தை ' என்ற சொல்லில் பொருத்தினால் ;    "நான்"  என்ற செருக்கு தன்மை வெளிப்படும்.  அதாவது கடவுள் உலகைப் படைத்த பொழுது , ஆதாம் ஏவாளையும் படைத்து , உலகை ஆண்டுக்கொள்ளும்படி சொல்கிறார். சில கட்டளைகளை ஆதாமுக்கு விதிக்கிறார் , (ஆதியாகமம் 2 : 17) . ஏவாள் சர்ப்பத்திடம் பதில் கூறுகையில் அவளும் அந்தக் கட்டளைகளை அறிந்திருந்தாள் என்று அறியமுடிகிறது (ஆதியாகமம் 3 : 3.) . அதனடிப்படையில் இங்கே 'அறியாமல் செய்த பாவம்' என்பதற்கு இடமில்லை ; அறிந்து செய்கிறாள். மேலும் சர்ப்பமானது , நீங்கள் சாவதில்லை , கண்கள் திறக்கப்படும் , நன்மை தீமை அறிவீர்கள் , தேவர்களைப் போல் இருப்பீர்கள் இதை தேவனும் அறிவார் என்றது (ஆதியாகமம் 3 : 4 , 5) . இங்கே படைத்த கடவுளுக்கு இணையாக தன்னையும் ஆக்கிக் கொள்ள துணிந்த  செயல்தான் ' துணிகரம் ' . நான் தேவத்தன்மை  அடைவேன். யார் எனக்கு என்ன செய்ய முடியும். என்னைப் படைத்த கடவுளால்தான் என்னை என்ன செய்ய முடியும் என்ற ஆணவம். மாத்திரமல்ல மனம் , புத்தி , சித்தம் (அறிவு) ஆகியவற்றால் இயைந்து இந்த துணிகரத்தை செய்தது. 
       இந்த துணிகரத்தை இன்றைய பாவம் நிறைந்து பெருகிய இவ்வுலக நடைமுறையின் அடிப்படையில் இருந்து பார்க்கும்போது நமக்கு , அது ஒரு சிறிய 'தவறு' என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் சாஸ்திரியார் , கடவுளின் படைப்பின் வழி இச்செயலை நோக்குகிறார். ஏனென்றால் மனிதனை (ஆதாமை) , கடவுள் தம் சாயலாக படைத்தார் (ஆதி. 1 : 26 , 27.) , பூமியின் மண்ணினாலே உருவாக்கினார் (ஆதி. 2 : 7.) , ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார் , மனுஷன் ஜீவாத்துமாவானான் (ஆதி. 2 : 7.) . 
மேலும் , சாஸ்திரியார் தன்னுடைய கீர்த்தனையில் (ஞானப் பதக் கீர்த்தனைகள் 387 , சரணம் 1 - ல் 
" ஆதி தொடுத்து அன்பை எடுத்தாய் , மனுடர் தமை
ஆணும் பெண்ணுமாய் படைத்தாய் ". 
என்று பாடுகிறார். அதாவது , ஆதிமுதலாய் இருக்கும்  பிதா தம்முடைய அன்பைக் கொண்டு மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார் என்று தம் கருத்தை பதிவு செய்கிறார். 
      ஆகவே அது தவறு அல்ல , மாபெரும் பாவம் , மகா பாவம் , துரோகம் என்பதை இக்கவியின் மூன்றாவது வரியில் ,  " பாதகம் அனைத்துந் தீர்க்க "   என்றுரைக்கிறார். 
     இவ்வுலக பாவத்தின் (அகந்தையின்) ஆதியாக ஆதாம் ஏவாளை முன்னிறுத்துகிற சாஸ்திரியார் , பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானவராகிய (1 கொரிந்தியர் 15 : 45.) இயேசு கிறிஸ்து பாவ நிவாரணியாக , " மனுடனாகி பாதகம் அனைத்தும் தீர்க்கப் பாடுபட்டு உயிரைத் தந்தார் " என்று தம் கவியில் குறிப்பிடுகிறார். இவரே ' இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர் '  (1 கொரி. 15 : 47.) என்பதையும் நினைவுபடுத்துகிறார்.  மாத்திரமல்ல இன்றைய உலகின் ' புது ஆதாம் ஏவாளாக ' நம்மையும் இவ்விடத்தில் வைத்து சிந்திக்க அழைக்கிறார் சாஸ்திரியார். 

பொருள் விளக்கம் : 

      ஆதாம் , ஏவாள் செய்த அகந்தையால் மனிதனாக அவதரித்து , மா பாவம் அனைத்தும் தீர்க்க பாடுபட்டு உயிரைத் தந்தீர் .  இந்த வேதநாயகனும்  வாழ்வதற்கு வழி எதுவும் அற்றவனாய் இருக்கிறேன். மிகுந்த நன்மைகளை எனக்கு ஏற்படுத்திக் கொடுக்க , இரங்குவாய் இயேசு நாதா. 

பரமன் பணியில்  
சங்கை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர்.
13.05.2020.

M20

வே.சா. , முத்திரையடி 21.
ஜெபமாலை 17., கவி 11.  

உபவாச நாட்களின் தேவாரம்  

" ஆதரவு அருளி எங்கள் 
  ஆபத்தை நீக்கி மேலுஞ்
  சாதியின் இடறல் அன்றிச்
  சபை எலாந் தழைக்கச் செய்து
  வேதநாயகன் பாட்டு எங்கள்
  விண்ணப்பங்களைக் கேட்டு அன்பாய்
  ஏதமே பொறுத்து எந்நாளும்
  எம்மை ஆள் ஏசு நாதா. " 

     இந்த ஜெபமாலை 17 - ன் இறுதியில் சாஸ்திரியார் குறிப்பிட்டுள்ள குறிப்பு : 
" புதுக் குருமார் தமிழ்ச் சனங்களுக்குச் செய்த கொடுமையைப் பற்றிப் பராபரனை நோக்கிக் கூப்பிட்ட முறைப்பாடு.  வருடம் 1834."

இந்த குறிப்புக்கு ஓர் சிறு விளக்கம் : 

      1. சாதிய பிரிவினையைத் தவிர்க்க புது குருமார் எடுத்த முயற்சிகள் , 2. சாதிய கட்டமைப்பை உடனடியாய் உடைத்தால் எத்தகைய சிக்கல்கள் எழும் என்று சாஸ்திரியார் புது குருமாருக்கு எடுத்துரைத்தது , 3. அதனால் சாஸ்திரியார் சாதி பிரிவினையை ஆதரித்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தி , அவரை சபையை விட்டு நீக்கியது , 4. அவரோடு உடன் நின்ற ஏனைய சபையாரையும் சபையினின்று நீக்கியது , 5. சபையில் யாருக்கு நன்மை உண்டாக வேண்டும் என்று புது குருமார் விரும்பினார்களோ அந்த மக்களும் சமூக சூழலை உணர்ந்து சாஸ்திரியாருக்கு உடன் நின்றது , 6. ஆனாலும் அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளாதே போன புது குருமார் , 7. அதனால் சபையில் ஏற்பட்ட கலக்கமும் , கலகமும் , 8. சபையில் ஏற்பட்ட பிளவு ,  இப்படி பல குழப்பங்களும் சிக்கல்களும் சூழ்ந்திருந்த தருணத்தில் , சாஸ்திரியார் தனக்கு ஏற்பட்ட அதீத  வேதனைகளை பராபரனிடம்  வெளிப்படுத்துவதாக இப்பகுதி அமைகிறது.    (உட்குறிப்பு : சாஸ்திரியார் சாதி வித்தியாசம் பாராட்டினாரா? என்ற கேள்வி , சாஸ்திரியாரின் படைப்புகளை ஆய்வு செய்த  இலக்கிய  -  வரலாற்று ஆய்வாளர்களுக்கு உண்டு.  ஏன் உங்களுக்கள்ளேயும் அந்த ஐயம் ஏற்படும். ஏற்படவேண்டும். சாஸ்திரியாரை நான் படித்து அறிந்த மட்டில் , அவர் சாதி வேற்றுமைகளை வெறுத்தார் - பகைத்தார் என்றே முடிவு கொள்ள முடிகிறது. அதற்கான நிறைய அவருடைய இலக்கிய - வாழ்வியல் ஆதாரங்களை சுட்டிக்காட்ட இயலும். ஆனாலும் அதற்கான இடமும் பதிவும் இது இல்லை , இருப்பினும் "சாஸ்திரக் கும்மி" என்ற அவருடைய நூலே அதற்கு சாட்சி. 
          மேலும் இந்த ஜெபமாலை 17, கவி. 10 - ல் , 
   " சங்கை போர்ந்து இலங்கும் தஞ்சைச்
      சுவார்ச்சு ஐயர் சபைகள் நாங்கள் " 

என்று பாடியிருப்பார். தந்தை சுவார்ட்ஸ் ஐயர் (Rev. Fr. Christian Fredric Schwartz) அவர்கள் சாதி அடிப்படையில் கிறிஸ்துவை அறிவிக்கவில்லை. எல்லாத் தரப்பு மக்களையும் நேசித்து 'கிறிஸ்துவின் சபையாக' ஏற்படுத்தினார். கிறிஸ்துவை சுவார்ட்ஸ் ஐயரிடம் கண்டதினால் தான் "சுவார்ச்சு ஐயர் சபைகள் நாங்கள்" என்று அவரால் கூற முடிந்தது.  'பராபரனின் அருளால் சாதிய பிரிவினை காலப்போக்கில் மறையும்'. என்ற சுவார்ட்ஸ் ஐயரின் உறுதிப்பாட்டை நம்பினார் சாஸ்திரியார். ஏனென்றால் சுவார்ட்ஸ் ஐயர் காலத்திலும் இந்த சாதியம் குறித்த சிக்கல் இருந்ததை அறியமுடிகிறது.)

பிற கவி குறிப்புகள் : 

      சாஸ்திரியாருடைய இந்த கடுமையான முறையீடு பற்றி 17 - ஆம்  ஜெபமாலையில் முந்தைய கவிகளில் சொல்லியிருப்பதை கீழ்கண்டவாறு அறியலாம். இதன் பொருள் எளிமையாய் விளங்ககூடியது. 

கவி. 1. 
" குருக்களும் பகைவரானார்
  கோயிலும் வேறதாயிற்று " 

கவி. 6. 
" கல்லறைக்கு இடமும் அற்றுக்
  காட்டினுக்கு அகற்றப் பட்டோம் " 

கவி. 8 .
" அன்னியர் ஆனோம் நாங்கள் " 

கவி. 9 .
" காட்டிலே சிதறிப் போனோம்
  கடூரமாய் அடிக்கப் பட்டோம் " 

கவி. 10. 
" சங்கை போர்ந்து இலங்கும் தஞ்சைச்
  சுவார்ச்சு ஐயர் சபைகள் நாங்கள் 
  .............
  எங்களை நினைப்பார் இல்லை "

     என்று தனது பாதிப்பின் நிலையை வெளிப்படுத்துகிறார். 

      ஜெபமாலை தொகுக்கப்பட்ட காலம் கி.பி. 1810 முதல் 1855 வரை என்று சாஸ்திரியார் இந்நூல் முகவுரையில் குறிப்பிடுகன்றார். 17 - ஆம் ஜெபமாலை பாடப்பட்ட வருடம் 1834 என்று குறிப்பையும் எழுதுகிறார்.  சாஸ்திரியாருடைய வாழ்வியல் மற்றும்  அக்கால வரலாறு அடிப்படையில் நோக்கினால் இப்பகுதி விரிந்து செல்லும். ஆகவே இக்கவிகளில் குறிப்பிடப்பட்டவைகளின் படி விளக்குகிறேன். இத்தகைய இலக்கிய பதிவை 'இலக்கிய அகச்சான்று' என்று கூறுவது இலக்கிய மரபு. தமக்கு ஏற்பட்ட கசந்த அநுபவங்களைக் கடவுளிடம் கூறி தன் உள்ளத்தை இந்த கவிகளின் வழி  வெளிப்படுத்துகிறார். அதுமாத்திரமன்றி , தான் அடைந்த வேதனைகளின் உச்சத்தில் கடவுளிடம் , ஆற்றாமைத் துயரால் சில பல கேள்விகளை கேட்கிறார். அவை , 

கவி. 1.
" இரக்கமே , எங்கே நின்றாய் " 

கவி. 2. 
" கொடுக்கவும் வகை அற்றாயோ " 

கவி. 3. 
" எத்தனைதரங் கூப்பிட்டோம் " 

கவி. 4. 
" கப்பலிற் தூங்கிறாயோ 
  கனக்க நித்திரை கொண்டாயோ
  எப்பொழுது எழுந்திருப்பாய் " 

கவி. 5. 
" எங்கே போயிருந்தாய் ஐயா " 

கவி. 6. 
" வல்லமை இலையோ , எங்கள்
  வறுமை கண்டு அறிந்திலாயோ
  அல்லது மனதில்லையோ
  அடியர் மேல் அன்பிலாயோ
  ............
  இல்லையோ இரக்கம் ஐயா " 

கவி. 7. 
" உன்னை விட்டு எங்கே போவோம் 
  பின்னொரு மீட்பன் உண்டோ 
  பெற்றவன் நீயோ வேறோ 
  என்னையா கவலை அற்றாய் " 

    என்று பல கேள்விகளை பரமனிடம் முன்வைப்பதை அறியலாம்.

      இவ்வாறு கேள்வி கேட்பது கிறிஸ்தவ  விசுவாச வாழ்வில் ஏற்புடையதோ? என்ற கேள்வியுடனேயே இக்கருத்துள் உள்நுழைகிறேன். இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் எத்தனையோ பேர் இயேசுவிடம் தங்கள் தேவைகளை கூறி வேண்டி நின்றனர். கிருபை பெற்றனர். திருமறையில் ஒரு பகுதியை நினைவு படுத்தி கொள்ளலாம் , அது தூய யோவான் 11 : 1 - 45. லாசருவின் மரணம்.  இப்பகுதியில் மார்த்தாளும் மரியாளும் இயேசுவினிடத்தில் , நீர் இங்கு இருந்திருப்பீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டானே (வச. 21,32.) என்று கேட்பார்கள். இந்த பகுதி பலமுறை வாசித்து கேட்டு அறிந்தவை. அதற்கு காரணம் கூற நாம் முற்பட்டால் , இயேசுவுடன் லாசரு , மார்த்தாள் , மரியாள் ஆகியோர் மிகுந்த அன்பின் ஐக்கியத்தில் இருந்தவர்கள் என்று கூறுவோம். அப்படியானால் நம்முடைய கிறிஸ்துவுடன் நாம் வைத்த   அன்பும் ஐக்கியமும் எத்தகையது என்ற கேள்வியும் எழுகிறது. இங்கே இந்த பதிவின் நோக்கம் ஆண்டவரிடம் கேள்வி கேட்பதைப் பற்றியது அல்ல. மாறாக கிறிஸ்துவுக்கும் நமக்கும் உள்ள உறவின் ஆழத்தைப் பரிசோதிப்பதே. முந்தைய பதிவு ஒன்றில் பக்தி நிலைகளைக் குறித்த செய்தியை கூறியிருந்தேன். அந்த அடிப்படையில்தான் இங்கே சாஸ்திரியார் கடவுளை தந்தையைப் போலும் உற்ற நண்பனைப் போலும் சிநேகித்ததினால் , அன்பு செய்ததினால் அத்தகைய உரிமையில் தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்துகிறார் என்பதை அறியலாம். இதைத்தான் லாசருவின் சகோதரிகள் இயேசுவிடம் வெளிப்படுத்தினார்கள். இயேசுவிடம் குற்றம் கண்டுபிடிக்க கேள்வி கேட்டவர்கள் ஏராளம். இங்கே சாஸ்திரியாருடைய கேள்வி : தன்னுடைய விசுவாசத்தை உறுதிபடுத்திக் கொள்வற்காகதான். இன்றைய நம்முடைய விசுவாச வாழ்விலும் , ஞானமுள்ள கேள்விகளை கேட்டு , பரம ஞானத்தைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக நாம் அழைக்கப்படுகிறோம். அப்படி ஞானமுள்ள கேள்விகள் எங்கே தோன்றும்? வளமான வாழ்விலா? சுகமான தருணத்திலா? இல்லை . துன்பங்கள் துயரங்கள் வேதனைகள் சோதனைகள் மற்றும் குறைவுகள் மத்தியில் தானே. சங்கீதகாரர் தாவீதின் சங்கீதங்கள் துதி பாடல்கள்தான். ஆம் , அந்த துதியின் சத்தம் எந்தச் சூழ்நிலையில் இருந்து எழுந்தவை என்பதை உற்று ஆய்ந்து பாருங்கள் .... பிற அவருடைய சங்கீதங்களும் அவரின் சரித்திர நிகழ்வுகளும்  அவற்றுக்கு காரணம் கூறும்.  ஒரு மனிதன் துன்புறும் வேளையில்தான் அவனின் சிந்தனை ஒளிர்கிறது அல்லது வளர்கிறது. இது உலக தத்துவம். திருமறை பாத்திரங்களிலும்  அதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. 

      " வாழ்வு காலத்தில் நன்மையை அநுபவித்திரு , தாழ்வு காலத்தில் சிந்தனை செய் ....... பிரசங்கி 7 : 14.
மேலும் , உபாகமம் 30 : 1. , சங்கீதம் 139 : 23. வசனங்களை வாசிக்கவும். 

      இங்கே சாஸ்திரியார் தனக்கு நேர்ந்த துயரங்களை மனிதனிடம் அல்ல , கடவுளிடம் எடுத்துரைக்கிறார். தன் உள்ளத்தின் துயரெல்லாம் கொட்டி தீர்த்தப்பின் , அமைதல் அடைந்தவராய் சபை அனைத்துக்கும் பொது வேண்டுதலாய் விண்ணப்பத்தை நிறைவு செய்கிறார்.

சொற்பொருள் : 

இடறல் - தடைபண்ணல் , நிந்தித்தல் 
எலாந் - எலாம் - எல்லாம்
தழைத்தல் - வளர்தல் , செழித்தல்
ஏதம் - குற்றம்
பொறுத்தல் - மன்னித்தல்
எம்மை - எங்களை
ஆள் - அடிமைக் கொள் , ஆளுகை செய் 

பொருள் விளக்கம் : 

      ஆதரவு அருளி எங்கள் ஆபத்தை நீக்கி , மேலும் சாதியினால் ஏற்படும் தடைகளை நிந்தைகளை அகற்றி , சபை எல்லாம் செழிக்கச் செய்து , வேதநாயகன் பாட்டாகிய எங்கள் விண்ணப்பங்களையும் கேட்டு ,  அன்பாய் குற்றத்தையெல்லாம் மன்னித்து , எந்நாளும் எங்களை ஆளுகை செய்யும் இயேசு நாதா. 

பரமன் பணியில் 
சங்கை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர்.
20.05.2020.

M21

வே.சா. , முத்திரையடி 22.
ஜெபமாலை 18., கவி 13.  

மனவாஞ்சை 

( திருப்புகழ் சந்தம் ) 

" பொல்லாத பேய்களையே தொழுத பாதகர்
கல்லாத மூடர்களாய் வளர் கபோதிகள் 
புல்லோர்கள் தீவினையாளர்கள் அநீதர்கள் - புலையாளர் 

எல்லாரும் வாரும் இதோ எனது நீதியை
அல்லாது சீவனுறாது கெடுவீர் நலம் 
இல்லாத ஏழைகளே என உசாவிய - இணையாளா 

உல்லாசமாய் உலக ஆசைகளிலே கன 
சல்லாபமாய் விளையாடி அடமாய் மனம்
ஒல்காமலே திரி பாவி எனை ஆள்வது உன் - அருளாமே

சொல் வேதநாயகன் ஓதிய மனோகர 
நல் ஆயன் ஏசு சுவாமி கிருபாகர
தொல் ஆதி பாவ விமோசன சருவேசுர - பரதேவே. " 

                மத்தேயு 11 : 28 - 30.
    " வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே ! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் ; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 
      நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன் ; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு , என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள் ; அப்பொழுது , உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
      என் நுகம் மெதுவாயும் , என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்." 

      இக்கவிக்கு சாஸ்திரியார் இந்த திருமறை வசனத்தை ஆதாரமாக கொடுத்துள்ளார். அதனடிப்படையில் சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன். 
     ' நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் '  என்று இயேசு கிறிஸ்து அழைப்பு விடுக்கிறார். அவர்கள் யார்? 'வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்கள்' . அந்த வருத்தம் பாவத்தினால் உண்டானது. அந்த பாவம் , பாரம் மிகுந்தது. அப்படிப்பட்டவர்களுக்கு பாவ பாரத்தினாலுண்டான வருத்தத்திலிருந்து அமைதலை , ஆறுதலை , நிம்மதியை தருவேன் என்கிறார் (வச. 28.) . இக்கவியில் எந்த வகை பாவ பாரம் என்ற பட்டியலை சாஸ்திரியார் முன்வைக்கிறார். 
       வச.29 ல் பாவத்தில் துன்புறும் மக்களுக்கு ஆறுதல் தருவதாக கூறும் ஆண்டவர் , என் பாரத்தை (நுகத்தை) உங்கள் மேல் ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற நிபந்தனையை விதிக்கிறார். அதை எப்படி சுமக்க வேண்டும் என்பதை என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள் என்று அழைக்கிறார். எது கிறிஸ்துவின் பாரம்? அது , பிதாவின் சித்தம் செய்வதே ! உலகத்தின் சித்தம் அல்ல. உலக ஆசைகள் அல்ல. தொடர்ந்த கவி வரிகளில் இதைத்தான் முன்னிறுத்துகிறார். பிதாவின் சித்தத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு , செய்யாதவர்களுக்கு இளைப்பாறுதல் இல்லை என்பதையும் , நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள போவதில்லை என்பதையும் வலியுறுத்தி கூறுவதை காண முடிகிறது.  
      நமது பாவ பாரமாகிய சிலுவையை சுமந்த ஆண்டவர் , பிதாவின் சித்தமாகிய தம்முடைய பாரத்தை (நுகத்தை) நம்மீது ஏற்றுக்கொள்ள அழைக்கிறார். அவருடைய பாரம் (நுகம்) மெதுவாயும் , இலகுவாயும் இருக்கிறது (வச. 30) என்கிறார். 
     " என் பிதாவே , இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும் ; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல , உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்."  மத்தேயு 26 : 39. தொடர்ந்து வச. 44 ல் ,    " .......   மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம் பண்ணினார்." 
       பிதாவின் சித்தத்தை செய்வதில் நமதாண்டவர் எவ்வளவு உறுதியாயிருந்தார் . அப்பணியை , அந்த சித்தத்தை செய்ய உங்களையும் என்னையும் பின் வைத்து , பரலோகை ஆயத்தம்பண்ணப் போயிருக்கிறார். மீண்டும் வருவார். (யோவான் 14 : 2 , 3)
     "உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக." மத்தேயு 6 : 10. 
மேலும் , மத்தேயு 18 : 14 ; 21 : 28 - 31. ; யோவான் 4 : 34. ; 5 : 30. ; 9 : 31. ஆகிய வசனங்களை வாசித்து அறியலாம். 

      நிறைவாக , மத்தேயு 6 : 33.    "  முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் , அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்." 

சொற்பொருள் : 

பாதகர் - துரோகிகள்
கபோதி - பார்வையற்றவன்
புல்லோர் - கீழ்மக்கள் , அற்பர் 
அநீதர் - கீழ்மக்கள் , நீதியற்றவர்
புலையாளர் - சண்டளர் , பொல்லாங்கர்  
சீவனுராது - சீவன் பெறாது 
உசாவிய - ஆராய்ந்த , ஆலோசித்த 
இணையாளா - இணைத்தல் செய்பவர் , சகாயம் செய்பவர்
சல்லாபம் - கூடிப்பேசுகை , பரிகாச பேச்சு , உரையாடல்
அடம் - பிடிவாதம் , ஈனம்
ஒல்காமல் - தளராமல்
திரி - அலைதல் , திரிதல் 
ஓதிய - சொல்லிய , போதித்த
மனோகர(ம்) - அழகு , மகிழ்ச்சி , விருப்பம்
கிருபாகர - கிருபையுடைய
தொல் - பழமை , முன்னானது , தொண்மை
ஆதி - தொண்மை , முதல் , வேர்
விமோசனம் - ஒழிதல் , நிவர்த்தி , விட்டு நீங்கல்
சருவேசுர - கடவுளாகிய
பரதேவே - பரலோகில் இருக்கும் தெய்வமே

பொருள் விளக்கம் : 

       பொல்லாத பேய்களையே தொழுத துரோகிகள் , கல்லாத மூடர்களாய் வளர்ந்து பார்வை இழந்தவர்கள் , அற்ப குணம் கொண்டவர்கள் , தீயச் செயல் செய்பவர்கள் , நீதியற்றவர்கள் , இவர்கள் எல்லாரும் கீழ்மக்களே ; 
      இத்தகையவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் , இதோ எனது நீதியை அல்லாமல் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள இயலாது. உங்கள் நித்திய ஜீவனுக்கான நலத்தை கெடுத்து போடுபவர்களாகிய , நன்மை ஒன்றும் இல்லாத ஏழைகளே என அழைத்தவர் , அவர்களின் தன்மைகளை ஆராய்ந்து அறிந்து , அவர்களுக்கு சகாயம் செய்பவர். (கடவுளிடம் இரக்கம் பெறாதவர்களை ஏழைகள் என்று சாஸ்திரியார் குறிப்பிடுகிறார்.) 
      உள்ளத்தின் ஆசைகளே பெரிதென எண்ணி உலக ஆசைகளிலே மிகுதியாய் பேசி விளையாடி மகிழ்ந்து பிடிவாதமாய் மனம் தளராமல் அலைந்து திரியும் பாவியாகிய என்னை ஆண்டுக்கொள்வது உன் அருள்தாமே. 
      கவி சொல்லும் வேதநாயகன் போதித்த , மகிழ்ச்சி தரும் நல்ல மேய்ப்பன் இயேசு சவாமி ,  கிருபையுடையவராய் ; முன்னான தொண்மை பாவத்தை நிவர்த்தி செய்ய  வந்த  கடவுளே , பரத்தில் இருக்கும் தெய்வமே , அத்தகைய அருளை வேண்டி நிற்கும் என் மன விருப்பத்தை நிறைவேற்றுவீராக.  

பரமன் பணியில் 
சங்கை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர். 
26.05.2020.

M22

வே.சா. , முத்திரையடி 23.
ஜெபமாலை 20., கவி 15.  

வீண்பத்தி நாசம்
(வீண் பக்தி நாசம்) 

கழிநெடில் 

" ஆதி நாயகனே சோதி நாயகனே
  அனந்த பேரின்ப நாயகனே
  அரிய நாயகனே பெரிய நாயகனே
  அர்ச்சய தேவ நாயகனே
  ஓதி நாயகனே நீதி நாயகனே
  ஒப்பிலாப் பரம நாயகனே
  உரிமை நாயகனே அருமை நாயகனே
  உன்னத ஞான நாயகனே 
  போத நாயகனே நாத நாயகனே
  புண்ணிய சொரூப நாயகனே
  பொறுமை நாயகனே சருவ நாயகனே
  போற்றருங் கிருபை நாயகனே
  வேத நாயகனே வேதநாயகன் பா
  விளம்பும் சங்கீத நாயகனே
  மிக்க நாயகனே முக்ய நாயகனே
  மேசியா யேசு நாயகனே."

     முந்தய ஜெபமாலை 19 - இல்  "வேத நூல் ஜெபங்கள்"  என்ற தலைப்பில் 1. பத்துக் கற்பனைகள் ,  2. விசுவாசப் பிரமாணம் ,  3. கர்த்தருடைய ஜெபம் ,  4. ஞானஸ்நானக் கட்டளை ,  5. நற்கருணைக் கட்டளை ,  6. பாவ சங்கீர்த்தனம்  என்ற ஆராதனை வழிபாட்டுக்குரிய முறைமைகளை , ' இது தரங்கம்பாடி டென்மார்க்கு மிஷனரிகளுடைய ஞான உபதேச குறிப்பு ( ஜெப ) புத்தகத்தில் உள்ள ஜெபத்தினை அடிப்படையாகக் கொண்டு பாடினது.'   என்ற பின்குறிப்போடு  கவிகளாக  பாடியிருப்பதினால்  'வேதநாயகன்'  தன் பெயரை நாட்டவில்லை. ஆகவே  19 - ஆம் ஜெபமாலையை விடுத்து , ஜெபமாலை 20 - ஐ பதிவு செய்கிறேன்.

20 ஆம் ஜெபமாலை அறிமுகம் : 

       இந்த ஜெபமாலை  "வீண் பக்தி நாசம்"  என்ற தலைப்பில் அமைந்தது. இதில் சொல்லப்பட்டிருப்பவை ,  சாஸ்திரியார் தான் , மாற்று சமயத்தில் இருந்து மீண்ட நிகழ்வை சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது என்பர். அது எதார்த்த நிலை அல்ல.  ஏனென்றால் சாஸ்திரியார் பிறப்பில் கிறிஸ்தவர். ஆனால் பிற சமய வேதங்கள் ,  இதிகாசங்கள் , சடங்குகள் , வழிபாட்டு முறைகளை அறிந்தவர். இந்த ஜெபமாலை 20 - ல் , புது கிறிஸ்தவர்களாகிய அதாவது புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு மனமாற்றம் அடைந்த கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கு என்றும் , அத்தகைய விசுவாசத்திற்குள் உள்நுழைய வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும் , அப்படி முன்னமே உள்ளே நுழைந்தவர்கள்  பழைய சமய பக்தி நெறியை , சடங்குகளை , நம்பிக்கையை , அதை வேளிப்படுத்திய விதத்தையெல்லாம் குறித்து சிந்தித்து , தான் தன் காலத்தில் அப்படி மனம் மாறிய கிறிஸ்தவர்களிடத்தும் காணப்பட்ட சில பல கிறிஸ்தவ விசுவாசத்திற்கு விரோதமான செயல்களை சுட்டிக்காட்டியே , அது வீண் பக்தி என்றும் அது நாசத்தை விளைவிக்கும் என்பதையும் வலியுறுத்தி பதிவு செய்கிறார். இது போன்ற பதிவை தம்முடைய பல இலக்கியங்களிலும் பதிவு செய்துள்ளார்.
       உதாரணமாக  "சாஸ்திரக் கும்மி"   என்ற நூலில் பலவகை சடங்குகளை முன்னிறுத்தி , அதை கிறிஸ்தவ விசுவாசத்திற்கு உட்பட்ட பிறகும் , அதை விட்டு விலகாமல் , பிடிவாதமாய் பற்றி நிற்பதையும் வண்மையாக கண்டித்து உணர்த்துகிறார் சாஸ்திரியார்.  சாதிய கட்டுகளை வெறுத்தும் , அதன் அடிப்படை சடங்குகளை விவாதித்து உடைத்தும் பகர்கிறார்.  சைவ , வைணவ சமயத்தை சாடுவதாய் சிலர் பொருள் கொள்வர். ஆனால் அது தவறு.  அச்சமய சாயலின் சடங்குகளை பின்பற்றும் கிறிஸ்துவின் சாட்சிகள் என்று சொல்லிக்கொள்பவர்களைதான் அவர் சாடுகிறார் என்பதை சாஸ்திரக் கும்மி நூலை முழுமையாய் படித்தவர் உணர்வர். முந்தைய பதிவில் சாஸ்திரியார் சாதி வித்தியாசம் பாராட்டினாரா? என்ற கேள்வியோடு சில கருத்துக்களை முன் வைத்தேன். அதற்கான முழு விடையும் கூட  இதில் உண்டு. 
      கிறிஸ்தவ வாழ்வின் விசுவாசத்திற்கு எதிரான செயல்களைக் குறித்து சொல்லப்பட்டவைகளில் , ஒரு கவியை மட்டும் உதாரணம் கூறி விளக்குகிறேன்.
  " பொஸ்தகத் தாலிக் குருசு வைத்துச் சிலர்
  போட்டுக் கொண்டது உண்டு என்றாலும்
  வித்தாரமாக மறுபுறம் தன்னிலே
  வேற்றுரு ஏதடி ஞானப் பெண்ணே."
              -- சாஸ்திரக் கும்மி , கவி. 139.

      'சாதிகள் அடையாளம்' என்ற தலைப்பில் இக்கவியை பாடுகிறார். மறைவாக சிலுவை அடையாளத்தை ஒரு புறத்திலும் , பெரிதாக மறுபுறத்தில் வேறு அடையாளத்தையும் ( தன் பழைய சமய சாதிய அடையாளங்களை )  கொண்ட தாலியை (மாங்கல்லியம்) அணியும் வழக்கம் கொண்டிருந்த அன்றைய சூழலை சாஸ்திரியார் வெளிப்படுத்துகிறார்.  இது போன்ற அன்றாட வாழ்வின் நிகழ்வில் கொண்டிருந்த இரட்டை வேடத்தை , மாறுபட்ட பக்தி நெறியை வீண் பக்தி என்றும் நாசத்தை விளைவிக்கும் என்பதையும் சாஸ்திரக் கும்மி நூலில் வலியுறுத்துகிறார். 
மத்தேயு 6 : 24.  " இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது ; ஒருவனைப் பகைத்து , மற்றவனைச் சிநேகிப்பான் ; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு , மற்றவனை அசட்டைபண்ணுவான் ; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ் செய்ய  உங்களால் கூடாது."    
  
       இன்றும் நூற்றாண்டுகள் கடந்தும் கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் , கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நமக்குள்ளும் அந்த வீண் பக்தி என்று சொல்லப்படுகிற பிற சமய சடங்குகள் பிணையப்பட்டிருக்கிறது என்பது மறுக்க இயலாதது. மறைக்கவும் முடியாதது. விட்டுவிட கூடாததாயுமிருக்கிறது.
       இதனுடைய தாக்கத்தின் ஒரு பகுதிதான் இந்த ஜெபமாலையில் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.

சொற்பொருள் : 

அனந்தம் - அந்தங்கெட்டது (முடிவு இல்லாதது) 
அரிய - அருமையான
அர்ச்சய - அருச்சனை - வணக்கம் , பூசித்தல் , வழிபடல்
ஓதி - அறிவுடையோன் , கல்வி , ஞானம்
போதம் - அறிவு , ஞானம்
நாதம் - ஒலி 
சொரூபம் - அழகு , உடம்பு , சாயல் , பரம் , வடிவு
போற்றரும் - போற்றுதற்கு அரிய
விளம்பும் - சொல்லும்
முக்ய - முக்கியம் - மேன்மை 

பொருள் விளக்கம் : 

       வேதத்தின் நாயகனை 23 முறை 'நாயகனே' என விளித்துரைக்கும் சாஸ்திரியார் , ஒரு முறை  'நாயகன்'  என்ற பதத்தை கூறி , அது   'வேதநா‌ய‌கன்'  என்ற தன் பெயர் என்பதை பதிவுசெய்கிறார். 
       ஆதியில் இருந்த நாயகனே , ஒளியான நாயகனே , முடிவில்லா பேரின்பத்தை அருளும் நாயகனே , அருமையான நாயகனே , பெரிய நாயகனே , வணங்குதற்குரிய தேவ நாயகனே , ஞான நாயகனே , நீதி நாயகனே , ஒப்பிடப்பட முடியாத  பரத்தில் இருக்கும் நாயகனே , எமக்கு உரிமையுள்ள நாயகனே , சிறப்புடைய நாயகனே , மேன்மை மிகு ஞானம் கொண்ட நாயகனே , ஞானத்தைப் போதிக்கும் நாயகனே , வார்த்தையாகிய நாயகனே , நற்செயலை உருவமாய் கொண்ட நாயகனே , பொறுமை நாயகனே , எல்லாவற்றுக்கும் நாயகனே , போற்றுதற்கு அருமையான கிருபை கொண்ட நாயகனே , வேதத்தினால்  சொல்லப்பட்ட நாயகனே , வேதநாயகன் பாடல் சொல்லும் சங்கீதங்களுக்கு நாயகனே , எல்லாவற்றிலும் உச்சமான நாயகனே , முக்கிய நாயகனே மேசியாவாகிய இயேசு நாயகனே.

பரமன் பணியில் 
சங்கை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர்.
30.05.2020.

M23

வே.சா. , முத்திரையடி 24.1.
ஜெபமாலை 21., கவி 17 & 1.

சமுதாய விண்ணப்பம் 

      இந்த ஜெபமாலையில் இரண்டு கவிகளில் முத்திரைபடியை பாடியுள்ளார் சாஸ்திரியார். வழக்கமாக இறுதி கவியில் அமைத்தது போல் ஒன்றும் , முதற் கவியில் ஒன்றும் என  மொத்தம் இரண்டு முத்திரையடிகளை புதுமையாக அமைத்துள்ளார். இந்த முறையை ஆராய்ந்து பார்க்கும் போது , ஏற்கனவே இந்த ஜெபமாலைக்கு முத்திரையடியை பதிவு செய்தவர் , பின்னர் தரங்கம்பாடி நிகழ்வை சுட்டிக்காட்டி எழுதியிருந்த கவியை இந்த ஜெபமாலையில்  பிற்சேர்க்கையாக சேர்த்திருக்க வேண்டும்.  ஜெபமாலை முழுமையான   தொகுப்பாக வெளியிடப்படுகிற பொழுது  இரண்டு கவிகளையும் சில திருத்தங்களோடு ஒன்றை முதல் கவியிலும் , மற்றொன்றை வழக்கமாக இறுதி கவியிலும் என சேர்த்திருப்பதற்கு இடமுண்டு. இனி இந்த முத்திரையடிகள் குறித்து விளக்கத்திற்கு வருவோம்.

சமுதாய விண்ணப்பம் விளக்கம் : 

      ' Litania ' என்று இலத்தின் மொழியிலும் ,  ' Litany '  என்று ஆங்கில மொழியிலும் வழக்கத்தில் இருந்த  சொல்லை "சமுதாய விண்ணப்பம்" என்று தமிழில் மொழிபெயர்ப்பு (Translate) செய்து  பயன்படுத்தி வந்தனர் ஆதி தமிழ் கிறிஸ்தவர்கள்.  இதை மூலமொழி உச்சரிப்பிலேயே ஒலிப்பெயர்ப்பு  (Transliterate)  செய்து இலிற்றானியா , லித்தானி என்றும் சொல்லி வந்தனர். 
      ஃபெப்ரிசியஸ் ஞானபாடல் புத்தகத்தில் 100 - வது பாடலாக   'சமுதாய விண்ணப்பம்'   இடம்பெற்றுள்ளது.  அக்காலந்தொட்டு ஏராளமான மன்றாட்டுகள் ஜெர்மன் முதலான மொழிகளிலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்பொழுதும் சில சபைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஜெப புத்தகத்தில் 'லித்தானியா'  - 'பொதுவான பிரார்த்தனை'  (The Litany) என்று இடம் பெற்றுள்ளது.   --    "இந்திய திருச்சபை - ஜெப புத்தகம்"  --  கிறிஸ்தவ அறிவு அபிவிருத்திச் சங்கம். THE BOOK OF COMMON PRAYER , ©️ I.S.P.C.K. , Delhi. (Indian Society for Promoting Christian). 
      சாஸ்திரியார் இந்த 'சமுதாய விண்ணப்பம்'  என்ற தலைப்பில் அமைத்த  ஜெபமாலையை ,  'லித்தானி'  போல் , மாதிரியாகக்  கொண்டு அதன் சாயலை பின்பற்றி  தனக்குண்டான சிறப்பின்படியும் தனித்துவத்தின்படியும்   அமைத்துள்ளார்.  இதைக்குறித்து   'ஜெபமாலை'  முகவுரையிலேயே குறிப்பிட்டுள்ளார் சாஸ்திரியார்.  அதன் சில பகுதிகளை அப்படியேயும் சில விளக்கத்தை அடைப்புக்குறிக்குள்ளும் கொடுக்கிறேன். 

              ஜெபமாலை - முகவுரை

     " இப்புஸ்தகம் ஐரோப்பியருடைய உன்னதமான பாடல்களாகிய பிரார்த்தனைப் புஸ்தகத்துக்கொப்பாய் செய்யப்பட்டது. 
     ----
     இச்செபப் பிரமாணத்தை வாசிக்கிற கிறிஸ்துவின் அவயவங்களாகிய திருக்கூட்டங்களே ! ஐரோப்பியர்களுடைய தேவ ஆராதனைத் திட்டங்களைக் காட்டுஞ் ஜெபப் பிரமாணத்துக்கு ஒப்பாக உங்களுக்கும் உங்கள் தேசாசாரத்தின் படி (தேச கலாச்சாரத்தின் / வழக்கத்தின்  படி) ( Indigenisation -  சுதேசமயமாக்கல்) யாதொரு தேவ ஆராதனைத் திட்டம் இருக்க வேண்டுமென்று சிந்தித்து வேதநாயக வேதசாஸ்திரி மிகுந்த கருத்தோடும் பிரயாசத்தோடும்  கி.பி. 1810 - ஆம் வருடம் முதல் 1855 - ஆம் வருடம் மட்டுஞ் சென்ற 45 - வருடகாலத்தில் வருடாந்திரங் கொஞ்சம் இந்த ஜெபமாலையை உண்டுபண்ணி இப்போது உங்களுக்குக் காணிக்கையாக அனுப்பி , நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் தன்னையும் தன் பின்னடியார்களையும் கர்த்தர் நிமித்தமாக நினைக்கவும் சிநேகிக்கவும் மன்றாடிக்கொள்கிறான். 

     ----  சுவிசேட கவிராயர் 
           வேதநாயக சாஸ்திரி. "

      இந்த 21 - ஆம் ஜெபமாலையின் இறுதியில்   'கவனிப்பு'  என்ற தலைப்பில் சில குறிப்புகளைக் கொடுத்துள்ளார் சாஸ்திரியார். அதனை பழைய மூல மொழி நடையிலிருந்து சற்று விலகி (புரிதலுக்காக) பதிவு செய்கிறேன். 
       ' இலித்தானி என்கிற சமுதாய விண்ணப்பம் பன்மையில் (நாங்கள் , எங்கள் என்று) சொல்லப்பட்டிருந்தாலும் , ஜெபமாலை ஒழுங்கின்படி ஒருமையில் (நான் , என் என்று) சொல்லப்பட்டுள்ளது. 
       இலித்தானி திரித்துவத்தின் பெயரை (பிதா , குமாரன் , பரிசுத்த ஆவி) முன்னிறுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.  ஆனால் இங்கே கவியின் முடிவு இயேசு கிறிஸ்துவை மகுடமாய் கொண்டிருப்பதினால் இயேசு கிறிஸ்துவை முன்னிறுத்தி பாடப்பட்டுள்ளது. 

17 -ஆம் கவிக்கு தனி குறிப்பு : 

       1817 -ஆம் வருடம் ஆடி மாதம் (ஜூலை - ஆகஸ்டு) தரங்கம்பாடியில் சீட்டுக்கவி விவாதத்தினால் உண்டான கலகத்தில் இராயப்ப நாட்டையர் (உள்நாட்டு ஆயர்) மகன் தானியேல் பிள்ளை என்பவர் , எல்லாரிலும் பக்தி வைராக்கியம் கொண்டிருந்தவர். அவருடைய தரும (நல்லொழுக்க) சிந்தனையைப் பற்றி அவருக்கு 
மத்தேயு 26 : 13.  "இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்."    -- என்ற வசனத்தின் அடிப்படையில் எழுதிய உடன்படிக்கையின் படி இந்த ஜெபமாலை 21 - ன் முடிவில் 17 - ஆம் கவியில் அவர் பெயரை குறிப்பிட்டு பாடப்பட்டது.' 

அது , 
    " தரங்கையில் எனக்குப் பரிந்து கொண்டிருந்த
     தானியேல் சந்ததிக்கு இரங்கும் " 

என்ற குறிப்பை பதிவு செய்துள்ளார் சாஸ்திரியார்.  ஆனாலும் அந்த சீட்டுக்கவி பற்றிய செய்தி அறியப்படவில்லை. அதைக் குறித்த ஆராய்ச்சியில் இறங்கினால் , அதன் கருத்து இன்னது என்பதை கூறுவதற்கு   முற்படின்  அது நீண்டு செல்லும் என்பதால் அதை இங்கு பதிவுசெய்ய இயலவில்லை.
      அடுத்தப் பதிவில் கவிகளையும் அதன் விளக்கத்தையும்  வெளியிடுகிறேன்.

பரமன் பணியில்
சங்கை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர். 
08.06.2020.

M24.1

வே.சா. , முத்திரையடி 24.2.
ஜெபமாலை 21., கவி 17 & 1

சமுதாய விண்ணப்பம் 

தொடர்ச்சி .........    

     கவி. 17.      கழிநெடில் 

"பரங்களில் இருக்கும் தயாபர பிதாவே
பணிந்த விண்ணப்பம் ஒன்றினங் கேள்
பத்தன் நான் சுவிசேட கவிராயன் *
பாடல் யாவுக்கும் நாயகன் நீ
இரங்கி ஆதரித்து எவ்வேளையும் எனைக்
கேட்டேணும் கொண்டு என் புறத்தினின் நின்று
இடர் எல்லாந் தவிர்த்து எண்ணியபடி முடிக்கும்
என் குல தெய்வமானதனாற்
தரங்கையில் எனக்குப் பரிந்து கொண்டிருந்த
தானியேல் சந்ததிக்கு இரங்குஞ்
சந்ததம் எனக்கும் ஞானப் பாட்டகர்க்குந்
தரும  உபகாரிகட்கு எல்லாம்
வரங்களை அளியும் வேதநாயகனை
வழி வழி அடிமையாய்க் கொள்ளும் *
மகத்துவ தேவ திரித்துவப் பொருளே
மாசிலா யேசு நாயகனே." 

சொற்பொருள் : 

தயாபர - கிருபையுடைய
பணிந்த - தாழ்ந்த
ஒன்றினம் - ஒற்றை
பத்தன் - பக்தன்
சுவிசேட - சுவிசேஷ
புறத்து - வெளிப்புறம் 
இடர் - ஆபத்து , துன்பம்
குலதெய்வம் - முன்னோர் முதலாய் வழிபட்ட தெய்வம் 
பரிந்து - ஆதரவாக (அ) ஆதரித்து பேசுதல் 
சந்ததம் - எப்பொழுதும்
பாட்டகர் - பாடகர்கள்
தருமம் - இயல்பு , நல்லொழுக்கம் , அறம்
உபகாரி - ஈகையாளன் , நன்மை செய்வோன்
வரம் - ஆசீர்வாதம் , நன்மை
வழிவழி - தலைமுறை , வம்ச பாரம்பரியம்

பொருள் விளக்கம் : 

       பரலோகில் இருக்கும் கிருபையுள்ள பிதாவே , தாழ்மையான விண்ணப்பம் ஒன்றினைக் கேள். பக்தனாகிய சுவிசேஷ கவிராயன் * பாடல் யாவுக்கும் நாயகன் நீ . எனக்கு இரக்கம் செய்து என்னை ஆதரித்து எவ்வேளையும் , என்னை கேட்டு விசாரித்து , என் உடன் இருந்து சுற்றியுள்ள துன்பமெல்லாம் நீக்கி , என் எண்ணங்களில் உள்ள விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி முடிக்கும் என் குலதெய்வமாய் நீ இருப்பதினால் , தரங்கம்பாடியில் எனக்கு ஆதரவாகப்  பேசி துணைநின்ற தானியேல் என்பவர்க்கும் அவர் தலைமுறைக்கும் இரக்கம் செய்யும். எப்பொழுதும் எனக்கும் , ஞானப் பாடகர்களுக்கும் , நன்மை செய்யும் இயல்பு கொண்டவர் எல்லாருக்கும் ஆசீர்வாதங்களை தாரும். வேதநாயகனை தலைமுறை தலைமுறையாக அடிமையாய் கொள்ளும் *.  மேன்மை பொருந்திய தெய்வீகத் திரித்துவப் (மும்மை) பொருளே , குற்றமொன்றும் இல்லாத இயேசு நாயகனே. 

கூடுதலாக சில குறிப்புகள் : 

      1*.  இக்கவியில் தரங்கம்பாடியில் கி.பி. 1817  -  ஆம் ஆண்டில்  நிகழ்ந்த  நிகழ்வை  குறிப்பிட்டுள்ள சாஸ்திரியார் , அதே தரங்கம்பாடியில் கி.பி. 1808 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 - ஆம் தேதியில் தரங்கை மக்களால் தனக்குக் கொடுக்கப்பட்ட  "சுவிசேஷக் கவிராயர்" என்ற பட்டத்தையும் நினைவுக்கூர்ந்தவராய் 
'பத்தன் நான் சுவிசேஷக் கவிராயன்' என்ற வரியின் மூலம்  பதிவு செய்துள்ளார். 
     2 *.  ' வேநாயகனை வழி வழி அடிமையாய் கொள்ளும் '  என்ற கவி வரிகளின் மூலமாக அவருடைய வேண்டுதல் கேட்கப்பட்டு , தலைமுறை தலைமுறையாக பராபரனின் திருப்பணியை அவருடைய சந்ததியினர் உலகெங்கும் சென்று இன்றளவும் செய்து வருவது ,  சாஸ்திரியாருடைய விண்ணப்பத்திற்கு கிடைத்த பலன் என்று கூறலாம். 

       கவி. 1.        கழிநெடில்   

"பொற்புறு வானும் பூமியும் அதனிற்
பொருந்தும் பற்பல பொருள் அனைத்தும்
புகழுடன் ஆறு தினம் அதில் அருளிப்
பொறை மிகக் காத்து அருள் புரியும்
அற்புதன் ஆதி பரன் திருப் புதல்வா
அருண்(ள்) மிகுங் கிறிஸ்து இரட்சகனே
அளவிலாச் சகல நன்மையின் கடலே
ஆண்டவா மேசியா அரசே
கற்புறுங் கிறிஸ்தோர் கூடிய வேதக்
களரிய நின் புகழுரைக்கக் 
கர்த்தனே எனையுங் கேட்பவர் தமையுங்
காத்து இரட்சித்து அருள் புரிந்தே
விற்பனக் குருக்கள் சாஸ்திரிமார்கள்
வேந்தர்கள் துரைக்கண் மற்றெவரும்
வேதநாயகன் என் பாடலுக்கு இரங்க
மேன்மை செய் யேசு நாயகனே." 

சொற்பொருள் : 

பொற்பு - அழகு
பொறை - பொறுமை
கற்பு - நீதிநெறி , முறைமை
களரி - பயிலிடம் , கூட்டம்
விற்பனர் - விற்பன்னர் - கற்றோர் , புலவர்
வேந்தர்கள் - அரசர்கள்
துரை - அதிகாரி , மேன்மகன்
மேன்மை - மகிமை

பொருள் விளக்கம் : 

       அழகு பொருந்திய வானமும் பூமியும் ; அதனுள் பொருத்தமாய் அமைந்த பற்பல உயிருள்ளதும் உயிரற்றதுமான பொருள் அனைத்தையும் , உமக்கு புகழ் உண்டாக ஆறு தினத்திலே படைத்தீர். மிகுந்த பொறுமையுடனும் அருள் உள்ளத்துடனும் காத்து அருள்புரியக்கூடிய அற்புதராகிய ஆதி பரம பிதாவின் திருமகனே , கிருபை மிகுந்த கிறிஸ்துவாகிய இரட்சகனே , அளவில்லாத சகல நன்மையின் கடலே , ஆண்டவனே , அபிஷேகம் பண்ணப்பட்டவராகிய மேசியா அரசே , நீதிநெறி நிறைந்த கிறிஸ்தோர் கூடிய கூட்டத்தில் திருமறையின் வழி உமது புகழை சொல்லிக்  கொண்டிருக்கிறோம். கர்த்தாவே என்னையும் ; இக்கவியினை கேட்பவர் யாவரையும் காத்து இரட்சித்து அருள்புரியும். கற்று அறிந்த  குருக்களும் , சாஸ்திரிமார்களும் (திருமறையை கற்று புலமைப் பெற்றவர்கள்) , அரசர்களும் , அதிகாரிகள் எல்லாரும் வேதநாயகனாகிய என் பாடலுக்கு இரக்கங் கொள்ளதக்கதாக மகத்துவத்தை அருள் செய்யும் இயேசு நாயகனே. 

பரமன் பணியில்
சங்கை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர்.
09.06.2020.

M24.2

வே.சா. , முத்திரையடி 25.
ஜெபமாலை 22., கவி 54. 

பரமானுபூதி 

"சதமே பதினெட்டோடு முச்சமயத்து
இதமேவிய ஆனியின் ஏழ் தினமே
பதம் ஏவும் நெலைப் பதியான் பரன் மேற்
சிதம் ஏவும் அனுபூதி தெரித்தனனே." 

தலைப்பு விளக்கம் : 

பரமானுபூதி = பரம் + அனுபூதி 
பரம் - கடவுள்
அனுபூதி - பிரமாணங்களைக் கொண்டறிந்த அறிவு. (இந்த பொருள் விளக்கத்தைதான் சாஸ்திரியாரும் தம் குறிப்பில் குறிப்பிடுகிறார் , தமிழ் மொழி அகராதியும் இதைதான் குறிப்பிடுகிறது.)
பிரமாணம் - அத்தாட்சி , ஆணை , உண்மை , எல்லை , முதல் வேதம் , விதி , கட்டளை

அனுபூதி = அனுபவம் + பூதி
அனுபவம் - அனுபோகம் - அனுபவப்படுவது
பூதி - தத்துவம் , மகத்துவம் , சித்தி

       'பரமானுபூதி'  (பரம் + அனுபவம் + பூதி) என்ற சொல் தொகுப்புக்கு நேரிடையாக பொருள் கூற கருதினால் 'கடவுளின் பிரமாணங்களைக் (உண்மைகளை , விதிகளை , கட்டளைகளை) கொண்டு , அறிந்த அறிவு என்று தெளிவு பெறலாம். தனித்தனி சொற்களாக பிரித்து பொருள் கொள்ள முற்பட்டால் ,  ' கடவுள் மீது கொண்ட பக்தி மிகுதியால் உண்டான அனுபவங்களின் விளைவாக ஏற்பட்ட புத்தி அல்லது அறிவு என்று எடுத்துக் கொள்ளலாம். இதுபோன்ற தத்துவங்கள் ; பக்தி நெறி கோட்பாடுகளை உள்ளடக்கியது. இத்தகைய கோட்பாடுகள் , குறிப்பாக தமிழ் இலக்கிய படைப்புகளில்  சமயங்களைப் (தெய்வங்களை) பற்றிய தமிழ் இலக்கியங்களில் வெகுவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. காலங்களின் அடிப்படையிலும் , பாடு பொருள் நோக்கிலும் பகுத்து பக்தி அல்லது சமய இலக்கியங்கள் என்று வழங்குவர் இலக்கியலாளர்கள்.   இன்னும் இதை ஆழமாய் ஆராய்வது இப்பதிவிற்கு பொருந்தாது. சாஸ்திரியாருடைய இறைத் தத்துவ கோட்பாடுகள்  , தமிழ் இலக்கிய மரபின் அடிப்படையில் அவருடைய படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துவதற்கென்றே   இந்த விளக்கம்.   சாஸ்திரியார் தனக்கு ஏற்பட்ட பக்தி - இறை அனுபவங்களை தமிழ் இலக்கிய மரபின் அடிப்படையில் பரமானுபூதி மூலமாக  வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை இங்கண் அறிந்து கொள்ளலாம்.

      இக்கவிக்கு சாஸ்திரியாரே விளக்கம் கொடுத்துள்ளார்.    அது , 

      " கிறி. 1803 ஆம் வருஷம்  ஆனி மாதம் 7 ஆம் நாள் திருநெல்வேலியான் இந்த ஐம்பத்து நான்கு செய்யுளையும் ஒரே நாளையிற் பாடினானென்க."

      இந்த விளக்கத்தை சற்று தெளிவுப் படுத்திக் கொள்வதற்காக ........  

  ' கிறிஸ்து பிறப்பின் 1803  - ஆம் வருஷம் ஆனி மாதம் 7 - ஆம் நாள் திருநெல்வேலி ஊரைச் சேர்ந்தவன் இந்த ஐம்பத்து நான்கு செய்யுளையும் ஒரே நாளில் பாடினான் என்று அறிந்து கொள்ளவும்.' 

சொற்பொருள் : 

சதம் - நூறு
சதமே பதினெட்டோடு - பதினெட்டு நூறு (1800)
முச்சமயத்த - மூன்று அமைத்த  -  (1800 + 3 = 1803)
ஏவிய - ஏவுதல் - சொல்லுதல் , கற்பித்தல்
ஆனி - ஆனி மாதம் (ஜூன் பிற்பகுதி - ஜூலை முற்பகுதி)
பதம் - சொல்
நெலை - நெல்லை - திருநெல்வேலி
பதியான் - ஊரைச் சேர்ந்தவன்
பரன் - பராபரன் , கடவுள்
சிதம் - வெற்றிக்கொள்ளப் பட்டது
தெரித்தனன் - தெரிவித்தனன்

பொருள் விளக்கம் : 

     1803 -  ஆம் ஆண்டில் இனிய ஆனி மாதம் 7 - ஆம் தினத்தில் * பாட்டு சொல்லும் திருநெல்வேலி ஊரைச் சேர்ந்தவன் *  பராபரன் மேல் பாடல் சொல்லி முடித்த வெற்றியை அனுபூதியாய் தெரிவித்தேன். 

குறிப்பு :  * 1.  1803 ஆம் ஆண்டு ஆனி மாதம் 7 - ஆம் நாள் என்பதை இன்றைய நம் பயன்பாட்டில் உள்ள ஆங்கில நாள் காட்டி (English Calendar) முறையில் பொருத்திப் பார்த்தால் , அது 1803 ஆம் ஆண்டு ஜூன் 19 (June 19 th , 1803) என்று ஒத்து நிற்கும். இது  ஞாயிற்றுக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது. 
இதற்கு தமிழ் - ஆங்கில நாள் காட்டி ஆதாரம் :  " Tamil Panchangam Based on Thiru Ganita for New Delhi , NCT , INDIA. 

    * 2.  சாஸ்திரியார் தம் படைப்புகளில் முத்திரையடி பதிவுகள் பலவற்றில் , தான் பிறந்த ஊராகிய "திருநெல்வேலியை "  அடையாளப் படுத்தியுள்ளார். அந்த அடையாளத்தை  விரும்பியுமிருக்கிறார். ஆனாலும் மக்கள் அவரை , அவர் வளர்ந்து சிறப்பு பெற்ற  தஞ்சாவூரை அடையாளப்படுத்தி , அடைமொழி இட்டு தஞ்சையான் , தஞ்சை கவிராயன் , தஞ்சை வேதநாயகன் என்றே அழைத்து சிறப்பித்துள்ளனர். 

பரமன் பணியில் 
சங்கை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர்.
14.06.2020.

M25

வே.சா. , முத்திரையடி 26.
ஜெபமாலை 23., கவி 13. 

கிறிஸ்து பிறப்பின் பேரில் 

சந்த விருத்தம் 

" கரிசித்த கிருபைக்கு முடிவற்ற அளவற்ற
கருணைக்கண் உள கர்த்தனே
கதி வைத்த அதி சித்திர மகிமைத் தரும நித்திய
கனமிக்க வளர் வஸ்துவே

தெரிசித்த கவடற்ற இடையர்க்கு அருள் கொடுத்த
திறமைப் பிரபல சித்தனே 
செகம் மெச்ச ஒரு சிற்றுரு எடுத்த அடவியில்
சிறிய கொட்டில் வரும் அத்தனே

வரிசித்த பர தத்துவ சுய தற்பர மகத்துவ
வர சத்துவ ஒரு சத்தியனே 
வழிகெட்ட அடிமைக்கு உன் அருள் சற்றெனும் வகுத்து
வளமைப்பட நடத்துவாய் 

பரிசுத்த சொருபத்து நிலை முக்கிய வடிவு ஒத்த
பழுதற்ற உயர் திரித்துவனே
பந்தச் சந்த விருத்தம் பாடிய 
வேதநாயக வாணனின் மேலுயர் 

அன்புச் சிந்தை மிகுத்துஞ் சீர்தரும்
யேசுநாத கிருபா நதியாகிய 
பண்பிட்டு உம்பர் வழுத்தும் தேவ
சுதாகரா மனுவேல் அரசாதிபனே." 

சொற்பொருள் : 

கரிசனை - அன்பு , பரிவு
கத்தனே - கர்த்தனே
சித்திர - அதிசய
வஸ்து - பொருள்
பிரபல - கீர்த்தி - புகழ் , முக்கியம்
சித்தன் - சித்தமுள்ளவன் (வே.சா.) , விருப்பமுள்ளவன்
செகம் - ஜெகம் - உலகம்
சிற்றுரு - சிறிய உருவம் - குழந்தை
அடவி - காடு (வே.சா.)
அத்தன் - கடவுள் , குரு , பிதா
வரிசித்த - ஒழுங்கமைந்த , முறையமைந்த 
வரசத்துவம் - ஆசீர்வாதப்பெலம் (வே.சா.)
சொருபம் - சொரூபம் - உருவம்
பந்தம் - தளை - யாப்பு உருப்பு (இலக்கண விதி)
சந்த விருத்தம் - இன்னோசையான விருத்தப்பா (இக்கவி செய்யுள் வகை)
வாணன் - வாழ்பவன்
உம்பர் - வானோர்
வழுத்தும் - சொல்லும்
சுதாகர - சுதனே (வே.சா.)
அதிபனே - உலகம் அனைத்துக்கும் கடவுளே. 

பொருள் விளக்கம் : 

      கரிசனையுள்ள கிருபைக்கு முடிவில்லாதவரும் , கருணைக் கண் உள்ளவருமாகிய கர்த்தனே ; உமது அடைக்கலத்தில் வைத்த , அதிக அதிசய மகிமையும் தருமமும் நித்திய பெருமையும் மிகுந்த உயர்ந்த பொருளே.
      கபடம் இல்லாத மேய்ப்பர்களுக்கு உமைக் காணக்கூடிய அருளைக் கொடுத்த திறமையுள்ள , புகழ் படைத்த உள்ளத்தில் விருப்பங் கொண்டவரே ; உலகம் போற்றும் குழந்தையாக , காட்டில் சிறிய மாட்டுக் கொட்டிலில் வந்து பிறந்த கடவுளே. 
      ஒழுங்கமைந்த , பரத்தில் இருக்கும் கடவுளே , தானாய் பர உலகை தன்னகத்தில் கொண்டிருக்கும் பெருமையோனே , ஆசீர்வாத பெலம் கொண்டுள்ள ஒரு உண்மையாளரே ; வாழ்வில் தீய வழியில் சென்றுவிட்ட உன் அடிமைக்கு , உனது அருளை சிறிதேனும் பிரித்துக் கொடுத்து ,  வாழ்வு வளம் பெற நடத்துவாயாக. 
      பரிசுத்தத்தின் உருவமாகிய  நிலையான பிதாவின் வடிவத்தை ஒத்த , பழுதில்லாத உயர்ந்த திரித்துவனே ; செய்யுளின் அங்கமான இந்த  'சந்தவிருத்தம்'  பாடிய வேதநாயகன் , கவி பாடி வாழ்பவன். 
      அவன் மேல் உயர்வான அன்பை  செலுத்தி , மிகுதியான  நன்மைகளைத் தரும்  இயேசு நாதராகிய கிருபை  நதியானவரின் பண்பை வானோர் சொல்லுவர். அவர் சொல்லுக்கு உரியவர்  தேவசுதனே. மனுவேல் ராஜாவாகிய  உலகனைத்திற்கும் கடவுளே. 

பரமன் பணியில் 
சங்கை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர்.
23.06.2020.

M26

வே.சா., முத்திரையடி 27.
ஜெபமாலை 24., கவி 28. 

கிறிஸ்துவின் சரித்திராதிந்தம். 

கழி நெடில்

நடுத்தீர்வை 

" வல்லமையாய் மேக ஆசனத் தெழுந்து
வானவர் படையெலாஞ் சூழ்க
வலிய எக்காளத்து அதிர் ஒலியதனால்
மரித்த யாவர்களையும் எழுப்பித்

தொல் உலகதனில் சீவனோடிருக்கும்
தொகையிலாப் பெயரையும் கூட்டித்
தூதரை விடுத்து ஆகாய மண்டலத்தில்
தொகுத்து இருவகுப்பையும் சேர்த்து

நல்லவர்களைத் தம் வலது பாரிசத்தில்
நாட்டி வானி ராச்சியம் அளித்து
நலிவுறும் பாவிகளை இடத்து உய்த்து
நரக பாதாளமே வீழ்த்தி

எல்லை இல்லாத மகத்துவ நவப்புது
எருசலேம் பட்டணத்து எழுந்தென்று
ஊழியும் வேதநாயகன் பாட
இன்புறும் யேசு நாயகனே." 

தலைப்பு விளக்கம் : 

* சரித்திராதிந்தம் - சரித்திரம் + ஆதி + அந்தம் 
கறிஸ்துவின் சரித்திர தொடக்கம் முதல் முடிவு மட்டும்.
* நடுத்தீர்வை - நடுவாக நின்று தீர்ப்பது - நியாயத் தீர்ப்பு

சொற்பொருள் : 

ஆசனம் - இராஜ சின்னத்தில் ஒன்று , சிங்காசனம்
தொல் - பழைமை - பழைய , ஆதி
தொல் உலகு - பழைமை உலகு
விடுத்து - அனுப்பி
பாரிசம் - பக்கம் , திசை
நாட்டி - நிறுத்தி
வானி ராச்சியம் - வான இராஜ்யம்
நலிவுறும் - அழிவுறும்
உய்த்து - சேர்த்து
மகத்துவம் - மேன்மை
நவம் - புதுமை
நவப்புது - புதுமையிலும் புதுமை

பொருள் விளக்கம் : 

      வல்லமையாய் மேக சிங்காசனத்திலிருந்து எழுந்து வானவராகிய தேவதூதர்கள் படை சூழ , அதிக ஓசையுடன் எக்காள சத்தம் முழங்க , அதனால் மரித்த  யாவரையும் உயிருடன் எழுப்பி ; 
      பழைமையான உலகில் உயிருள்ள எண்ணிக்கையில் அடங்காத எல்லாரையும் கூட்டி , தேவதூதர்களை அனுப்பி ஆகாய மண்டலத்தில்  ஒன்றுக்கூட்டி இரண்டு பிரிவையும் சேர்ப்பார்.
      நல்லவர்களைத் தம்முடைய வலது பக்கத்தில் நிறுத்தி அவர்களுக்கு வான இராஜ்யம் கொடுத்து , அழிவுறும்பாவிகளை இடப்பக்கம் சேர்த்து நரக பாதாளத்தில் வீழ்த்துவார். 
      எல்லை இல்லாத மேன்மை கொண்ட  புதுமையிலும் புதுமையான எருசலேம் நகரத்தில் எழுந்தருளும்மட்டும் ,  நெடுங்காலம் வேதநாயகன் பாட , அதைக்கேட்டு இன்புறும் இயேசு நாயகனே. 

பரமன் பணியில் 
சங்கை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர்.
02.07.2020.

M27
  • Facebook
  • Twitter
  • Instagram
bottom of page